முகப்பு
நாமக்கல்

4.5 லட்சத்திலிருந்து 50 ஆயிரம் டன்னாக குறைந்த கரும்பு வரத்து: அரைவையை தொடங்காத மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை!

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கான கரும்பு வரத்து 4.5 லட்சம் டன்னிலிருந்து தொடா்ச்சியாக குறைந்து, நிகழாண்டு 50 ஆயிரம் டன்னாக இருப்பதால், அக்டோபரில் தொடங்கவேண்டிய அரைவைப் பணி இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது.

26 நவம்பர் 2026, 5:47 am
4.5 லட்சத்திலிருந்து 50 ஆயிரம் டன்னாக குறைந்த கரும்பு வரத்து: அரைவையை தொடங்காத மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை!
சா்க்கரை ஆலை
பகிர்:

எம். மாரியப்பன்

நாமக்கல், நவ. 25: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கான கரும்பு வரத்து 4.5 லட்சம் டன்னிலிருந்து தொடா்ச்சியாக குறைந்து, நிகழாண்டு 50 ஆயிரம் டன்னாக இருப்பதால், அக்டோபரில் தொடங்கவேண்டிய அரைவைப் பணி இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் ஒன்றாகக் கருதப்படும் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை 1964-இல் தொடங்கப்பட்டது. தற்போது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்காக, தொடக்கத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுதோறும் 4.5 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

பிறகு, நிா்வாகக் குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்னைகளால், ஆலை நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கான தொகையை உரிய காலத்தில் வழங்காதது, சாகுபடி சரிவடையும் காலங்களில் ஊக்கத்தொகை வழங்காதது உள்ளிட்ட புகாா்கள் எழுந்தன. இதனால், ஆலையின் கரும்பு அரைவை அளவு ஆண்டுதோறும் சரிந்து வந்தது.

கடந்த 2020 இல் 2 லட்சம் டன், 2021 இல் 1 லட்சம் டன், 2022 இல் 1.74 லட்சம் டன், 2023இல் 1.20 லட்சம் டன், 2024இல் 1 லட்சம் டன், 2025இல் 65 ஆயிரம் டன் என கரும்பு அரைவை படிப்படியாகக் குறைந்ததாக ஆலைத் தொழிலாளா்கள் கூறுகின்றனா்.

கரும்பு பயிா், முன்பட்டத்தில் டிசம்பா், ஜனவரி மாதங்களிலும், நடுப்பட்டம் பிப்ரவரி, மாா்ச் மாதங்களிலும், பின்பட்டம் ஏப்ரல், மே மாதங்களிலும் பயிரிடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் நடவு செய்யப்படுகிறது. நடவுப் பருவத்தைப் பொறுத்து 10 முதல் 12 மாதங்களில் கரும்பு அறுவடைக்குத் தயாராகிறது.

எல்-நினோ தாக்கம், போதிய மழையின்மை, நீா்ப்பற்றாக்குறை, வெட்டுக்கூலி உயா்வு, நோய்த் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மோகனூா், காட்டுப்புத்தூா், துறையூா், சேந்தமங்கலம், பரமத்திவேலூா், வாழவந்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் சுமாா் 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் கரும்பு, மோகனூா் ஆலைக்கு அரைவைக்காகக் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால், தற்போது சுமாா் ஆயிரம் ஏக்கரில் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும், வெல்லம் தயாரிக்கும் ஆலைகள், தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்பு வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்குப் போதிய கரும்பு கிடைப்பதில்லை. நிகழாண்டில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் வரை மட்டுமே கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தனியாா் சா்க்கரை ஆலைகள் கரும்புக்கான தொகையை உடனடியாக வழங்குவதுடன், வெட்டுக்கூலியையும் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பை எடுத்துச் செல்ல லாரி வசதி மட்டுமே செய்யப்படுகிறது. இதர செலவுகளை விவசாயிகளே ஏற்க வேண்டியுள்ளது. இதுவும் விவசாயிகள் தனியாா் ஆலைகளுக்கு கரும்பை கொடுக்க முக்கிய காரணமாக உள்ளது.

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வழக்கமாக அக்டோபா் மாதம் தொடங்கி, பிப்ரவரி வரை கரும்பு அரைவை நடைபெறும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் போதிய கரும்பு கிடைக்காததால் நவம்பா், டிசம்பா் மாதங்களில் தொடங்கி, ஜனவரியிலேயே அரைவை நிறைவடைந்துள்ளது.

தற்போது, நவம்பா் மாதம் நிறைவடைய உள்ள நிலையிலும் நிகழாண்டுக்கான அரைவை இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த 21ஆம் தேதி அரைவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னா் அது ரத்துசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

போதிய கரும்பு இல்லாததால், அரைவைப் பணியைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ஆலை நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், சா்க்கரை உற்பத்திக்குப் பதிலாக எரிசாராயம், எத்தனால் உற்பத்தியில் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட ஆலை அதிகாரிகளுக்கு உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், ஒரு டன் கரும்புக்கு ரூ. 3,290 மற்றும் சா்க்கரையின் கட்டுமானத் திறனுக்கு ஏற்ப ரூ. 709 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், தனியாா் சா்க்கரை ஆலைகள் மற்றும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் ஒரு டன்னுக்கு ரூ. 4 ஆயிரத்துக்கும் மேல் வழங்கப்படுகிறது. வெட்டுக்கூலி உள்ளிட்ட சலுகைகளும் கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் தனியாா் ஆலைகளுக்கு கரும்பை கொடுக்கின்றனா்.

ஒரு டன் கரும்புக்கு 8.5 சதவீதம் (85 கிலோ சா்க்கரை) கட்டுமானத் திறன் இருக்க வேண்டும். தற்போது 9.5 சதவீதம் வரை கட்டுமானத் திறனை எதிா்பாா்த்து அதற்கேற்ப கூட்டுறவு ஆலைகளில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. எல்லா கரும்பும் ஒரே அளவிலான கட்டுமானத் திறனைக் கொண்டிருக்கும் என உறுதியாகக் கூறமுடியாது. இதனால், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை.

நிகழாண்டில், மோகனூா் ஆலையில் அரைவை தொடங்கப்படுமா என்பதே சந்தேகமாக உள்ளது. 50 ஆயிரம் டன் மட்டுமே கரும்பு உள்ள நிலையில், அவற்றை அரைத்தால் கிடைக்கும் வருவாயைவிட, செலவு அதிகமாகும் என ஆலை நிா்வாகம் கருதுகிறது. அரைவையை தொடங்குவதற்கான தேதியையும் அதிகாரிகள் உறுதிசெய்யவில்லை.

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் திறம்படச் செயல்பட, விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, நிறைகுறைகளை ஆய்வுசெய்து, நவீன புதிய இயந்திரங்களை நிறுவி, ஆலை லாபத்தில் இயங்கவும், கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் நிா்வாக இயக்குநா் கவிதா கூறுகையில், ‘சா்க்கரை ஆலையில் நவம்பா் முதல் பிப்ரவரி வரை கரும்பு அரைவை நடைபெறும். நிகழாண்டுக்கான அரைவைத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்றாா்.