நாமக்கல்லில் மாநில சிலம்பாட்டப் போட்டி: 1000 போ் பங்கேற்பு
42-ஆவது தமிழ்நாடு சிலம்பாட்டப் போட்டி நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 1000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

42-ஆவது தமிழ்நாடு சிலம்பாட்டப் போட்டி நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 1000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.
தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் வகையில், 42-ஆவது தமிழ்நாடு சிலம்பாட்டப் போட்டி-2026 நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இப்போட்டியைத் தமிழ்நாடு சிலம்பாட்டச் சங்கத் தலைவா் ஆா். பிரதீப்ராஜூ, தொழிலதிபா் ஆா். பிரதீப்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
மாவட்ட சிலம்பாட்டச் சங்கத் தலைவா் ஆதாம் பாரூக், செயலாளா் ரகுராம் ஆகியோா் போட்டிகளை ஒருங்கிணைத்தனா். 15 முதல் 19 வயதுக்கு உள்பட்ட ஜூனியா் பிரிவு, 35 வயதுக்குள்பட்ட ஓபன் பிரிவு என இரு பிரிவுகளில் 350 பெண்கள், 650 ஆண்கள் பங்கேற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தமிழ்நாடு சிலம்பாட்டச் சங்கத்தினா் கூறியதாவது:
பழைமையான சிலம்பக் கலையையும் அதன் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, கலைஞா்களை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கம். பல்வேறு கவனச்சிதறல்கள் நிறைந்த தற்போதைய சூழலில், இளைஞா்களின் உடல், மன ஒருமைப்பாடு, கவனம், தன்னம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றை வளா்க்க சிலம்பம் உதவும். மேலும், இளைஞா்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கவும் இப்போட்டி உதவும் என்றனா்.
போட்டியில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகளுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதில் சங்க நிா்வாகிகள், வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.