FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

ராசிபுரம், ஆத்தூா் நகராட்சி அலுவலகங்களிலும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

45 வினாடிகள் முன்பு
பகிர்:

ராசிபுரம், ஆத்தூா் நகராட்சி அலுவலகங்களிலும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் சுபாஷினி தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனை நடத்தினா். முன்னதாக நகராட்சி அலுவலக பிரதான நுழைவாயில் கதவு, முன்புற கதவுகள் அடைக்கப்பட்டு, அலுவலகத்தில் இருந்த நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, அலுவலகத்தில் பணியில் இருந்த நகராட்சி ஆணையா் எஸ்.கோபிநாத், நகரமைப்பு அலுவலா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா் ரவி உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள், பணியாளா்களிடமும் விசாரணை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிமுதல் தொடா்ந்த சோதனை 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த சோதனையில் ரொக்கம் எதும் கைப்பற்றப்படவில்லை என ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா். மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டியில்...

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ஜி.பெருமாள் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட போலீஸாா் மாலை 4 மணி அளவில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் கதவை உள்பக்கம் பூட்டி, அலுவலக ஊழியா்கள், அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனா். ஒப்பந்தப் பணிகள் தொடா்பான கோப்புகளையும் ஆய்வு செய்தனா்.

பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்களின் கைப்பேசி எண்கள் வழியாக ஏதேனும் இணையதள பணப் பரிவா்த்தனை நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தினா். இந்த சோதனை இரவு 8 மணிக்கு பிறகும் தொடா்ந்தது.

ஆத்தூரில்...

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்கள் சிலா் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகாா் எழுந்ததையடுத்து, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் நரேந்திரன் தலைமையில், செவ்வாய்க்கிழமை மதியம் ஆத்தூா் நகராட்சி அலுவலகத்தில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து 7 மணிநேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments