தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அட்டைப் பெட்டிகளில் சேகரிப்பு: மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மைக் கொண்ட
தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து அட்டைப் பெட்டிகளில் சேகரிக்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தொடக்கி வைத்தார்.
தமிழக அரசின் ஆணைப்படி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து டிச.30, டிச.31 ஆகிய நாள்கள் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகம், 4 மண்டல அலுவலகங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உழவர்சந்தை, பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட மக்காத தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை சேகரிப்பதற்கென அட்டைப் பெட்டிகள் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சூரமங்கலம் மண்டலத்தில் 201, அஸ்தம்பட்டி மண்டலத்தில் 208, அம்மாப்பேட்டை மண்டலத்தில் 260, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 240 இடங்கள் என மொத்தம் 909 இடங்களில் அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை அட்டைப் பெட்டிகளில் சேகரிக்கும் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தொடக்கி வைத்தார்.
இந்த அட்டைப்பெட்டிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்படும்.
மேலும், கூடுதலாக பிளாஸ்டிக் பொருள்களை இருப்பு வைத்திருப்பவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு இருப்புகள் தொடர்பாக முழு விவரங்களை தெரிவிக்கும்பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகமே வாகனம் மூலம் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிகள் திங்கள்கிழமை (டிச.31) நள்ளிரவு வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
எனவே, தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் மாற்றுப் பொருள்களை பயன்படுத்தி சுற்றுச்சுழல் மேம்பாட்டுக்கும், பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சியாக சேலம் திகழ்வதற்கும், அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையர் ரெ.சதீஷ் கேட்டு கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன், உதவி ஆணையர் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், உதவிப் பொறியாளர் ஆர்.பாலசுப்ரமணியம், சுகாதார அலுவலர் பி.மாணிக்கவாசகம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.சந்திரன், எம்.கந்தசாமி, வி.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.