FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பா.ஜ.க. அரசை வெளியேற்ற வேண்டும்: ஏஐடியூசி பொதுச் செயலர் அமர்ஜித் கௌர்

வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பா.ஜ.க. அரசை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என

Updated On : 7 ஜூன் 2018, 9:33 am IST
பகிர்:

வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பா.ஜ.க. அரசை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரும், ஏஐடியூசி பொதுச் செயலருமான அமர்ஜித் கௌர் தெரிவித்தார்.
தமிழக ஏஐடியூசி மாநில பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  இதில் ஏஐடியூசி தேசிய பொதுச் செயலர் அமர்ஜித் கௌர் கலந்து கொண்டார்.  முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆனால்,  மக்களின் போராட்டத்தை திசை திருப்பும் வகையில், சமூக விரோதிகள்தான் காரணம் என தமிழக அரசு கூறுவது  வெட்கக்கேடான செயலாகும்.  
மக்களுக்கான அரசு என்று சொல்லும் மத்திய பா.ஜ.க. அரசு,  மக்களுக்கு எதிரான அரசாகவும்,  தனியார் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது.  வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ள இந்தியாவை சிதைக்கும் முயற்சியில் பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளது.  மாநில மொழி, கலாசாரம், பண்பாடுக்கு எதிராக அவர்கள் செயல்படுகின்றனர்.
மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன.  ஆனால், தனியார் நிறுவனங்களோ, விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பொதுத் துறை நிறுவனங்களின் லாப,  நஷ்ட கணக்கை பார்த்து மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.  ஆனால் மத்திய பா.ஜ.க. அரசோ பொதுத் துறை நிறுவனங்களை எந்தவிதக் காரணமும் இல்லாமல் மூடி வருகிறது. 
இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு எதிராகவும்,  கலாசாரத்துக்கு எதிராகவும் உள்ள பா.ஜ.க. அரசை வெளியேற்ற வேண்டும்.  மத்திய பா.ஜ.க. அரசு இந்தியாவின் ஜனநாயகத்துக்கு பெரிய ஆபத்தாக இருக்கிறது.  எனவே மாற்று அரசை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  அந்தவகையில், வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து பா.ஜ.க. அரசை வெளியேற்ற வேண்டும். 
மேகாலயம்,  கோவா,  அருணாசல பிரதேசம்,  நாகாலாந்து ஆகிய மாநிலத் தேர்தல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சி,  கர்நாடகத் தேர்தலில் சரியாக செயல்பட்டு,  மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  இது நல்ல ஒரு முன்னேற்றம்தான். எனவே நாடு முழுவதும் மதச்சார்பற்றக் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.
மாநில கட்சிகள் தங்களது கொள்கை,  நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளலாம்.  ஆனால் மத்தியில் ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் பா.ஜ.க.வை வெற்றிப் பெற முடியும் என்ற கொள்கையில் உடன்பட வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சியில் ஆளுநர் பதவி என்பது மாநிலங்களை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.  மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஆளுநர்களை பின்னிருந்து இயக்குபவர்களாக உள்ளனர்.  எங்களை பொருத்தவரையில் ஆளுநர் பதவியே வேண்டாம் என்பதுதான் நிலைப்பாடாகும்.
இந்தியாவில் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற அனைத்து மதச் சார்பற்ற கட்சிகளும் இணைய வேண்டும்.  அந்தவகையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவைப் பாதுகாப்போம். அரசியலமைப்பை காப்போம் என்பதை வலியுறுத்தி நடத்தப்படும் பிரசாரம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தில்லியில் நிறைவுபெறுகிறது என்றார்.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் கே.சுப்பராயன்,  மாநில பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி, மாவட்ட செயலர் ஏ.மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments