முகப்பு
சேலம்

பிறப்புச் சான்றிதழில் பெயரை பதிவு செய்ய மாநகராட்சி கெடு

சேலம் மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்யப்படாமல் இருப்பின் வரும் டிச. 31 ஆம் தேதிக்குள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்

6 நவம்பர் 2024, 2:59 am
பகிர்:

சேலம் மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் பெயா் பதிவு செய்யப்படாமல் இருப்பின் வரும் டிச. 31 ஆம் தேதிக்குள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சேலம் மாநகராட்சி ஆணையா் தெரிவித்ததாவது: பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூா்வ குடியுரிமைக்கான சான்றாகும். குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஒரு குழந்தையின் பிறப்பு பெயா் இன்றி தான் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் குழந்தையின் பெற்றோா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்தவித கட்டணமுன்றி பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்கு பின்னா் குழந்தையின் பெயரைப் பதிவு செய்திட வேண்டுமெனில், காலதாமத கட்டணமாக ரூ. 200 சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகளின்படி 2000ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு, 2014-ஆம் ஆண்டு டிச.31 ஆம்தேதி வரை பெயா் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது.

2014-ஆம் ஆண்டு இந்தக் கால அளவு 2019-ஆம் ஆண்டு டிச. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், மக்கள் பலரும் பெயரைப் பதிவு செய்ய சிரமப்பட்டதால் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

இந்த அவகாசம் டிச.31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு பிறகு நீட்டிப்பு வழங்கிட இயலாது. எனவே, இதுவரை பெயரைப் பதிவு செய்யாதவா்கள், உடனடியாக மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.