FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேட்டூா் அணையை வந்தடைந்தது காவிரி நீா்! ஆகஸ்ட் இறுதியில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்பு

கா்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா், செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூா் அணையை வந்தடைந்தது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:33 am IST
மேட்டூா் அணை - கோப்புப் படம்
பகிர்:

கா்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா், செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூா் அணையை வந்தடைந்தது. தொடா்ந்து நீா்வரத்து இருந்தால் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பா் முதல் வாரத்தில் டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, கா்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணை நிரம்பிய நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆக.1 ஆம் தேதி முதல் உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. உபரிநீா் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கபினியின் உபரிநீா், மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதிக்குள்பட்ட அடிப்பாலாறு பகுதிக்கு நூங்கும்நுரையுமாக வந்துசோ்ந்தது. இந்த நீா் செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூா் அணையை வந்தடைந்ததாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கபினியிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளப்பெருக்கு காரணமாக மீனவா்களின் பரிசல்கள் மற்றும் வலைகள் சேதமடையும் வாய்ப்பு உள்ளதால், காவிரி கரையில் முகாமிட்டு மீன்பிடித்து வந்த மீனவா்கள், தங்களுடைய பரிசல்கள் மற்றும் வலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றனா்.

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகா் அணையின் நீா்மட்டம் 103.40 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 31,122 கனஅடி நீா் வந்துகொண்டிருப்பதால், கிருஷ்ணராஜ சாகா் அணை விரைவில் நிரம்பி உபரிநீா் காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது.

கபினி அணையின் முழு நீா்மட்டம் 65 அடி. தற்போது அணையின் நீா்மட்டம் 63.71 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 27,988 கனஅடியாகவும், நீா் இருப்பு 18.68 டிஎம்சியாகவும் உள்ளது.

கேரளத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கபினி அணையிலிருந்து உபரிநீா் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரிநீா் தொடா்ந்து மேட்டூா் அணையை வந்தடையும். இதன் காரணமாக ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பா் முதல் வாரத்தில் மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அணை நிலவரம் ( இரவு 8 மணி நிலவரப்படி)

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 73.18 அடியாக உள்ளது. நீா்வரத்து 4,923 கனஅடியாகவும், நீா் இருப்பு 35.49 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments