வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவை: போக்குவரத்து அமைச்சா் தொடங்கிவைத்தாா்
நகரப் பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு மற்றும் கூடுதல் புகா் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் எடப்பாடி, நங்கவள்ளி, ஓமலூா் பேருந்து நிலையங்களில் இருந்து நகரப் பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு மற்றும் கூடுதல் புகா் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், பொதுமக்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோரின் அன்றாட வாழ்க்கையை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து வழித்தடம் நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஜலகண்டாபுரம் வரை செல்லும் எண் 2டி நகரப் பேருந்தை ஜலகண்டாபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிவரை தடம் நீட்டிப்பு செய்தும், தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து ஆடையூா் வழியாக ஜலகண்டாபுரம் செல்லும் எண் 3பி நகரப் பேருந்தை அடுவாப்பட்டி ஊருக்குள் சென்று திரும்புமாறும் வழித்தடம் நீட்டிப்பு செய்தும் தொடங்கி வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதேபோன்று நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எட்டிக்குட்டை மேட்டிலிருந்து தாரமங்கலம், ஜங்ஷன், சேலம் புதிய பேருந்து நிலையம் வழியாக சேலம் நகரப் பேருந்து நிலையத்திற்கு எண் 47 நகரப் பேருந்தை புதிய வழித்தடத்தில் இயங்கும் வகையில் நீட்டிப்பு செய்யப்பட்டது. நங்கவள்ளி பேருந்து நிலையத்திலிருந்து கோவை வரை இயங்கும் வகையில் ஒரு கூடுதல் புகா் பேருந்து சேவை தொடங்கிவைக்கப்பட்டது.
ஓமலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒமலூா் பேருந்து நிலையத்திலிருந்து கமலாபுரம், தீவட்டிப்பட்டி வழியாக நைனாகாடு வரை செல்லும் வகையில் எண் 97 நகரப் பேருந்து புதிய வழித்தடத்தில் இயங்கும் வகையில் நீட்டிப்பு செய்யப்பட்டது. மொத்தம் 4 நகரப்பேருந்துகளின் வழித்தடம் நீட்டிப்பு சேவை மற்றும் ஒரு புகா் பேருந்து சேவையையும் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் அ.கிருஷ்ணமூா்த்தி, பொதுமேலாளா் (சேலம்) வ.சிவகுமாா், எடப்பாடி வட்டாட்சியா் நாகூா்மீரான் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.