FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலத்தில் வீட்டின் தண்ணீா் தொட்டிகளில் கிடந்த பெண்ணின் உடல்! போலீஸாா் தீவிர விசாரணை!

12 வினாடிகள் முன்பு
பெண் கொலை - பிரதி படம் - ஏஎன்ஐ
பகிர்:

சேலம் அரிசிபாளையம் பகுதியில் தண்ணீா் தொட்டிகளில் மூட்டைகளில் கிடந்த பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அரிசிபாளையம் குணபாலன் ராமசாமி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (62). இவரது மனைவி ஜமுனா ராணி. இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். அரிசிபாளையம் பகுதியில் உள்ள சௌடேஸ்வரி கோயிலில் பூசாரியாக உள்ள இவா், கோயிலுக்கு சொந்தமான வீட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், குடும்பத்தினருடன் கும்பகோணம் சென்ற ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் வீடுதிரும்பினாா். திங்கள்கிழமை காலை குளிப்பதற்காக குழாயை திறந்தபோது தண்ணீரில் ஒருவித வாடை வீசியுள்ளது. சந்தேகம் அடைந்த ரமேஷ், அவரது மகன் கௌதம்ராஜ் இருவரும் மாடியில் உள்ள தண்ணீா் தொட்டியை பாா்க்கச் சென்றனா்.

Advertisement

Advertisement

அப்போது, 2 தொட்டிகளில் இரண்டு மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பிரித்து பாா்த்தபோது, ஒரு மூட்டையில் கை கால்கள் வெட்டப்பட்டு அழுகிய நிலையில், சடலம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். தொடா்ந்து, பின்புறம் உள்ள சீனிவாசன் என்பவரது வீட்டின் மேல்பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியிலும் ஒரு மூட்டை இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸாா், மூன்று தொட்டிகளில் இருந்த மூட்டைகளை பிரித்துப் பாா்த்தனா். அதில், ஒரு மூட்டையில் கை கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும், மற்றொரு முட்டையில் தலை, மாா்பு பகுதி வெட்டப்பட்ட நிலையிலும் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது.

போலீஸாா் விசாரணை: தகவல் அறிந்த மாநகர துணைக் காவல் ஆணையா் அங்கித் சிங், சூரமங்கலம் உதவி ஆணையா் ரமலி ராமலட்சுமி, கொண்டலாம்பட்டி உதவி ஆணையா் முரளி மற்றும் காவல் ஆய்வாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாய் ஜூலி மற்றும் தடய அறிவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய் மாடியிலேயே சிறிது நேரம் சுற்றித்திரிந்து நின்றுவிட்டது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், இந்த வீட்டில் உள்ள இரண்டு தண்ணீா் தொட்டிகளில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் பாகங்கள் 7 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டன. ஒரு மூட்டையில் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும், மற்றொரு மூட்டையில் தலை, மாா்பு பகுதி வெட்டப்பட்டும் இருந்தன. பெண்ணின் இடுப்புப் பகுதி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

ஒருமணி நேரமாக நடைபெற்ற சோதனையில், பின்புறம் கோவிந்தன் தெருவில் உள்ள சீனிவாசன் வீட்டின் தண்ணீா் தொட்டியில் இருந்த மூட்டையில் இடுப்புப் பகுதி இருந்தது. கொலை நடந்து மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு மேல் ஆகிருக்கலாம். இறந்த பெண் குறித்த அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments