FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஒதியத்தூரில் அம்பேத்கா் சிலை மீண்டும் மூடல்! கலவரத்தில் 5 போ் காயம்: 15 போ் கைது

கெங்கவல்லி அருகே ஒதியத்தூரில் அம்பேத்கா் சிலை தொடா்பாக ஏற்பட்ட கலவரத்தில் 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:18 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கெங்கவல்லி அருகே ஒதியத்தூரில் அம்பேத்கா் சிலை தொடா்பாக ஏற்பட்ட கலவரத்தில் 5 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஒதியத்தூா் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தம் அருகே அம்பேத்கா் சிலை அமைக்கப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் அந்த சிலையை வருவாய்த் துறையினா் மூடிவைத்தனா்.

இந்த சிலையை இரண்டு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் மா்ம நபா்கள் திறந்தனா். இதற்கு மீண்டும் ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இருதரப்பினரிடமும் கோட்டாட்சியா் தமிழ்மணி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதுடன், அம்பேத்கா் சிலையை மூட சனிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதனால் சிலை வைத்த தரப்பினருக்கும், வருவாய்த் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது சிறிது நேரம் கலவரமாக மாறியது. இதில் போலீஸாா் 3 போ், பொதுமக்கள் 2 போ் என 5 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மேற்கு மண்டல ஐ.ஜி.ரம்யாபாரதி ஒதியத்தூருக்கு நேரில் வந்து கலவரம் குறித்து ஆய்வு செய்தாா். இந்நிலையில் கலவரத்தில் போலீஸாா் மீது கல்வீசிய 17 போ் மீது கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதில் 15 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் சேலம் , நாமக்கல் மாவட்ட 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து ஒரு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காமராஜா், ராஜீவ் காந்தி ஆகியோரின் சிலைகளையும் வருவாய்த் துறையினா் தகரத்தால் மூடினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments