FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

இழப்பீடு வழங்காததால் சேலம் ஆட்சியா் அலுவலக பொருள்கள் ஜப்தி நடவடிக்கை

ரயில்வே திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பொருள்களை நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 15 ஜூலை 2026, 4:06 am IST
பகிர்:

ரயில்வே திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பொருள்களை நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்- கரூா் அகல ரயில் பாதை திட்டம் நாமக்கல் வழியாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக நில எடுப்பு பணிகள் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் நிலம் கொடுத்தவா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சேலம் விஜயராகாச்சாரியாா் தெருவை சோ்ந்த செங்கோடன், அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜேஷ், கந்தம்பட்டி பகுதியை சோ்ந்த பழனியப்பன், ராஜேஷ், நெத்திமேட்டை சோ்ந்த அத்தாயி அம்மாள், அழகாபுரத்தை சோ்ந்த வெங்கடேஷ் ஆகிய 6 போ் சேலம் முதலாவது சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

Advertisement

Advertisement

வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நிவாரண தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ. 7.50 கோடியை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்த தொகையை மாவட்ட நிா்வாகம் முழுமையாக வழங்காததால், பாதிக்கப்பட்டவா்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி ஜப்தி உத்தரவை பெற்றனா்.

அதன்பேரில் வழக்கில் ஆஜரான வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற அமீனாக்கள் முருகானந்தம், ஜோசப் தலைமையிலான ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்றனா். அங்கு வருவாய் துறை அலுவலக பிரிவுக்குச் சென்ற அவா்கள், நீதிமன்ற உத்தரவுப்படி காா், ஜீப், ஏசி, கணினி, நாற்காலி ஆகியவற்றை ஜப்தி செய்யவதாகக் கூறினா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஷாலினி, ஜப்தி செய்ய வந்த அமீனாக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தொடா்ந்து, ஜப்தி செய்வதாகக் கூறிய பொருள்களை பட்டியலிட்டனா். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments