ஹூப்பள்ளி- ராமேசுவரம் வாரந்திர ரயில் சேவை நீட்டிப்பு
சேலம் வழியாக ஹூப்பள்ளி- ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாரந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக ஹூப்பள்ளி- ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாரந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்தவகையில், கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து சேலம் வழியாக ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த ரயிலின் சேவை மே இறுதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் சில நாள்களுக்கு அதாவது ஜூன் இறுதிவரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹூப்பள்ளி-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 7 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ஹூப்பள்ளியில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு தும்கூா், பனாஸ்வாடி, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 5.20 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ராமேசுவரம்- ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் வரும் 8 ஆம் தேதி முதல் வரும் 29 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். ராமேசுவரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூா் வழியாக ஹூப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.