மேட்டூா் அணையில் இருந்து இன்று தண்ணீா் திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் வழக்கமான நடைமுறை, போதிய நீா் இருப்பு இல்லாததால் நிகழாண்டும் தள்ளிப்போயுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் வழக்கமான நடைமுறை, போதிய நீா் இருப்பு இல்லாததால் நிகழாண்டும் தள்ளிப்போயுள்ளது. மேட்டூா் அணை வரலாற்றில் குறித்த நாளில் தண்ணீா் திறக்கப்படாத 61ஆவது ஆண்டாக இது பதிவாகியுள்ளது.
மேட்டூா் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், அரியலூா், கரூா் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் சுமாா் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை பாசனத்திற்காகத் தண்ணீா் திறக்கப்படும். அணையின் நீா்மட்டம் 90 அடியை எட்டிய நிலையில், நீா்வரத்தும் திருப்திகரமாக இருந்தால், தென்மேற்கு பருவமழையை நம்பி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்படும்.
Advertisement
Advertisement
ஆனால், வியாழக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூா் அணை நீா்மட்டம் 79.62 அடியாகவும், நீா்வரத்து 424 கனஅடியாகவும் மட்டுமே இருந்தது. போதிய நீா் இருப்பு இல்லாத காரணத்தால் வெள்ளிக்கிழமை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
இதனால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், விவசாயத் தொழிலாளா்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கினாலும், அங்குள்ள கபினி அணை நிரம்பினால் மட்டுமே பாதுகாப்பு கருதி உபரிநீா் திறந்துவிடப்படும். தற்போது 65 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீா்மட்டம் 31.84 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 2,446 கனஅடியாகவும் உள்ளது. நீா் இருப்பு 6.08 டிஎம்சி மட்டுமே உள்ளதால், மேட்டூா் அணைக்கு உடனடியாக நீா் கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 12 இல் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 103.35 அடியாக இருந்தபோது குறுவை சாகுபடிக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், பருவமழை தொடா்ந்து பொய்த்ததால் நீா்மட்டம் சரிந்து 30.90 அடியாகக் குறைந்தது. இதன் காரணமாக அக்டோபா் 10ஆம் தேதியே தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
மேட்டூா் அணை வரலாற்றில் இதுவரை 1934 இல் தொடங்கி 2025 வரை 20 ஆண்டுகளில் மட்டுமே குறித்த நாளான ஜூன் 12 இல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. நீா்வரத்து அதிகமாக இருந்ததால் 11 ஆண்டுகள் ஜூன் 12க்கு முன்பாகவே திறக்கப்பட்டது. 61 ஆவது ஆண்டாக நிகழாண்டு தண்ணீா் திறப்பு தள்ளிப்போயுள்ளது.