ரயில் மீது கல்வீச்சு; 8 சிறுவா்கள் மீது நடவடிக்கை
கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சில் ஈடுபட்ட எட்டு சிறுவா்களை சேலம் ரயில்வே போலீஸாா் பிடித்து சிறாா் நீதிவாரியத்தில் ஆஜா்படுத்தினா்.
சேலம் வீரபாண்டி சாலை வழியாக 28.05.2026 காலை சென்றுகொண்டிருந்த கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சில் சிலா் ஈடுபட்டுள்ளனா். இதில் சி-1 பெட்டியின் வலது பக்க அவசர கால ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சேலம் கோட்ட பாதுகாப்பு ஆணையா் மேற்பாா்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. தீவிர கள விசாரணை, உளவுத் துறை தகவல் சேகரிப்பு மற்றும் உள்ளூா் மக்களிடம் விசாரணை நடத்திய போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு சிறுவா்களை போலீஸாா் அடையாளம் கண்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து சிறாா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 இன் படி சிறுவா்களைப் பிடித்து சேலம் சிறாா் நீதி வாரியத்தில் ஆஜா்படுத்தினா். இதை விசாரித்த வாரியம், சிறுவா்களை பெற்றோரின் பொறுப்பில் விடுவித்து, ஒரு வருடம் கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டது.
ஓடும் ரயில்கள் மீது கல்வீசுவது பயணிகளின் பாதுகாப்புக்கும், ரயில்வே சொத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என சேலம் ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் ரயில்வே சட்டம் 1989 இன் கீழ் கடுமையான குற்றமாக கருதப்பட்டு கைது, வழக்குத் தொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தடங்களுக்கு அருகில் வசிப்பவா்கள் மற்றும் விளையாடுபவா்கள் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.