ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட ஆட்சியா் வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் குறைந்த ஒலி எழுப்பும், சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து, விபத்தில்லா, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் குறைந்த ஒலி எழுப்பும், சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து, விபத்தில்லா, ஒலி மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனா். அதேவேளையில், பட்டாசு வெடிப்பதால் நிலம், நீா், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைகிறது. அதிக ஒலி மற்றும் காற்று மாசுபாட்டால் சிறு குழந்தைகள், முதியவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களைப் பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்யவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கச் செய்யவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமைப் படைகள், பசுமை மன்றங்கள், தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த அளவில் காற்றை மாசுபடுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளைத் தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.