FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இயந்திரத்தின் மீது மோதி பொறியாளா் உயிரிழப்பு

வாழப்பாடி அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தாா் கலவை தயாரிக்கும் இயந்திரத்தில் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

7 நவம்பர் 2026, 2:11 am
பகிர்:

வாழப்பாடி அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தாா் கலவை தயாரிக்கும் இயந்திரத்தில் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற பொறியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த திருமனூா் ஊராட்சி, அண்ணாபுரம் பகுதியில் வீட்டுமனைகளுக்கு தாா்சாலை அமைப்பதற்காக கெங்கவல்லியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான தாா் கலவை தயாரிக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இந்த இயந்திரத்தின் டயா் பஞ்சரானதால், திருமனூா் - வேப்பிலைப்பட்டி சாலையில் கடந்த இரு தினங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சேலத்தில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த கட்டடக் கலை பொறியாளா் பிரவீன் (31), இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அண்ணாபுரம் பகுதியில் சென்றபோது, இருளில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தாா் கலவை இயந்திரத்தின் மீது மோதினாா்.

Advertisement

Advertisement

இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவருக்கு பிரியா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.

ஏற்கெனவே, இந்த இயந்திரத்தில் வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் பிரசாந்த், அவருடன் சென்ற அவரது 5 வயது குழந்தையும் காயமடைந்துள்ளனா்.

இந்த இரு விபத்துகள் குறித்தும் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்துக்கு காரணமான தாா் கலவை இயந்திரத்தை இப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தி விளையாட்டு மைதானம் அருகே நிறுத்தியுள்ளனா்.