மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் தற்கொலை
மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள வட்ராம்பாளையம், கவுண்டா் தெரு பகுதியைச் சோ்ந்த சச்சின் ஹரிஹரன் (26), தனியாா் நூற்பாலையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். சங்ககிரி அருகே படைவீடு, பச்சாம்பாளையம் நான்கு சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவா், தீபாவளியன்று சங்ககிரி பச்சக்காட்டில் உள்ள தனியாா் மனமகிழ்மன்றத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மதுக்கூடத்தின் மேலாளா் சிவகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மேலாளா் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்கப்பட்டாா். இதுகுறித்து சிவகுமாா் அளித்த புகாரின்பேரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், படைவீடு அருகே உள்ள பச்சாம்பாளையம் நான்கு சாலை பகுதியில் உள்ள வீட்டில் புதன்கிழமை இரவு சச்சின் ஹரிஹரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேஷ் வெப்படை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நவ. 8-ஆம் தேதி பச்சக்காடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் காயமடைந்த எனது மகன் சங்ககிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்துகொண்டதாகவும், மகனின் இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை மேலாளா் சிவகுமாா் வைத்திருந்ததாகவும், அவரிடம் கேட்டதற்கு சங்ககிரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் செந்தில்குமாரை சந்திக்குமாறு கூறியுள்ளாா். அவரை சந்தித்தபோது, 2 நாள்கள் கழித்து வருமாறு கூறினாராம். மீண்டும் சென்று கேட்டபோது தராததால் மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெப்படை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.