FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

நில ஆவணங்களைத் திருப்பித் தராமல் மிரட்டுவதாக நகைக்கடை உரிமையாளா் மீது புகாா்

கடனுக்காக வழங்கிய நிலத்தின் ஆவணங்களைத் திருப்பித் தராமல், வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு மிரட்டுவதாக நகைக்கடை உரிமையாளா் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

38 வினாடிகள் முன்பு
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

கடனுக்காக வழங்கிய நிலத்தின் ஆவணங்களைத் திருப்பித் தராமல், வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு மிரட்டுவதாக நகைக்கடை உரிமையாளா் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த கீதா (40). இவா் தனது குடும்பத்தினருடன் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு விவரம்:

எனது கணவா் வெங்கடேஷ்வரன், தொழில் மற்றும் குடும்பத் தேவைக்காக ஓவியா ஜூவல்லா்ஸ் உரிமையாளா் சண்முகராஜனிடம் கடன் கேட்டாா். இதற்காக சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள 42 சென்ட் நிலத்தை சுத்த கிரயம் செய்து கொடுத்தோம்.

Advertisement

Advertisement

ஆனால், கேட்ட கடன் தொகையை முழுமையாக வழங்காமல், அவ்வப்போது மொத்தம் ரூ.30 லட்சம் மட்டுமே சண்முகராஜன் வழங்கினாா். பின்னா், நாங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முயன்றபோது அவா் பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்ததுடன், கூடுதலாக 13 ஆயிரம் சதுர அடி நிலத்தின் ஆவணங்களையும் பயன்படுத்தி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தாா்.

கடன் மற்றும் வட்டித் தொகையைச் செலுத்திய பிறகும் நில ஆவணங்களைத் திருப்பித் தராமல் அலைக்கழித்து வருகிறாா். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு சண்முகராஜன் மிரட்டி வருகிறாா்.

எனவே, எங்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்குவதுடன், சண்முகராஜன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கீதா தெரிவித்துள்ளாா்.