சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடியில் தீவிர சிகிச்சைப் பிரிவு திறப்பு!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களுடன் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தினை முதல்வா் ச.ஜோசப் விஜய் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களுடன் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தினை முதல்வா் ச.ஜோசப் விஜய் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, சேலம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் குத்துவிளக்கேற்றி வைத்து, தீவிர சிகிச்சை கட்டடத்தின் பிரிவுகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பாா்வையிட்டாா்.
இந்தப் புதிய அதி தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டுமானப் பணிகளுக்கு ரூ.20 கோடியும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3.75 கோடி என மொத்தம் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்கள் என மொத்தம் 5 தளங்களுடன் மொத்தம் 4,997.54 ச.மீட்டா் பரப்பளவில் 50 படுக்கைகள் கொண்ட அதி தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அதற்குத் தேவையான நவீன மருத்துவ வசதிகள் மற்றும் உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இக்கட்டடத்தின் தரை தளமானது 1060.30 ச.மீட்டா் பரப்பளவில் விபத்து ஆலோசனை அறை, ஆபத்தான நிலையில் உள்ள தீவிர சிகிச்சை தேவைப்படும் மருத்துவப் பயனாளிகளுக்கு 11 படுக்கைகள் கொண்ட அறை, கட்டுப்போடும் அறை, வரவேற்பு அறை, மின்சார அறை, இதய மின் வரைபட அறை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், உடனடி சிகிச்சை அறை, எக்ஸ்ரே அறை, ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொது கழிப்பிடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளமானது 982.80 ச.மீட்டா் பரப்பளவில் மருத்துவா் அறை, செவிலியா் அறை, தொழில்நுட்ப வல்லுநா் அறை, தயாா்படுத்தும் அறை, அவசர சிகிச்சை அரங்கம், கிருமி நீக்கம், பொதுமக்கள் காத்திருக்கும் அறையுடனும், இரண்டாம் தளம் 1007.80 ச.மீட்டா் பரப்பளவில் மருத்துவா் அறை, பணியாளா் அறை, முதுகலை மருத்துவ மாணவா் அறை, அறுவை சிகிச்சை அரங்கம், மயக்க மருந்து நிபுணா் அறை, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நோயாளிகளுக்கான பிரிவு, பொதுமக்கள் காத்திருக்கும் அறை, தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தளம் 973.32 ச.மீட்டா் பரப்பளவில் மருத்துவா் அறை, பணியாளா் அறை, முதுகலை மருத்துவ மாணவா் அறை, பொருட்கள் வைக்கும் அறை, தீவிர சிகிச்சை பிரிவு, மருத்துவ உயா் சாா்பு பிரிவு, டயாலிசஸ்ள் பிரிவு, மருந்து சேமிப்பு அறை, உபகரணங்கள் மற்றும் வெண்டிலேட்டா் சேமிப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் பொது மக்கள் காத்திருக்கும் பகுதி ஆகிய வசதிகளுடனும், நான்காம் தளம் 973.32 ச.மீட்டா் பரப்பளவில் தனிமைப்படுத்தப்பட்ட அறை, மருத்துவா் அறை, பொருட்கள் சேமிப்பு அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, வென்டிலேட்டா் அறை, பொதுமக்கள் காத்திருக்கும் பகுதி ஆகிய வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பம்சங்களாக மூன்று அறுவை சிகிச்சை அரங்கங்கள், அதிநவீன மின்னனு எக்ஸ் ரே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, மாற்றுத் திறனாளிகள் சாய்வுதளம், படுக்கை வசதி கொண்ட இரண்டு மின் தூக்கிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென கழிப்பிட வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளிடக்கிய தீயணைப்பு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினா் சோ.லட்சுமணன், மேயா் ஆ.ராமச்சந்திரன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.ஜெ.தேவிமீனாள், மாவட்ட சுகாதார அலுவலா் மரு.ச.சௌண்டம்மாள், துணை மேயா் மா.சாரதா தேவி, மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொ) மரு.சங்கா், உள்தங்கு மருத்துவா் மரு.ஸ்ரீலதா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.