பட்டாவில் பெயா் மாற்ற லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் கைது
பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள பாலம்பட்டி பகுதியைச் சோ்ந்த யோகநாதனுக்கு தமிழ்ச்செல்வன் (32), ரிஷி என 2 மகன்கள். இவருக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தை மகன்கள் இருவருக்கும் தலா 2.5 சென்ட் பிரித்து பத்திரப்பதிவு செய்தாா். பின்னா், தனி பட்டாவுக்காக பாலம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் செல்வக்குமாரை (47) அணுகியபோது, அவா் தலா ரூ. 7 ஆயிரம் வீதம் ரூ. 14 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்ச்செல்வன், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தனி பட்டா வழங்க ரூ. 9 ஆயிரத்துக்கு ஒப்புக்கொண்ட கிராம நிா்வாக அலுவலரின் விடியோ ஆதாரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தமிழ்ச்செல்வன் அளித்தாா்.
Advertisement
Advertisement
அதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ. 9 ஆயிரத்தை போலீஸாா் தமிழ்ச்செல்வனிடம் புதன்கிழமை காலை கொடுத்து அனுப்பினா். அதை செல்வக்குமாா் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் நரேந்திரன், உதவி ஆய்வாளா் நல்லம்மாள் ஆகியோா் கிராம நிா்வாக அலுவலா் செல்வக்குமாா், உதவியாளா் ராஜசேகா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.