முகப்பு
சேலம்

இரட்டைக் கொலை வழக்கு: வடமாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை

சேலம் அருகே மளிகைக் கடை நடத்தி வந்த தம்பதியை கொலை செய்த வழக்கில், வடமாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை விதித்து சேலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

26 நவம்பர் 2026, 4:08 am
இரட்டைக் கொலை வழக்கு: வடமாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சேலம் அருகே மளிகைக் கடை நடத்தி வந்த தம்பதியை கொலை செய்த வழக்கில், வடமாநில இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை விதித்து சேலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம் அருகே ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள எட்டிக்குட்டை தெருவில் வசித்து வந்த பாஸ்கரன் (70), வித்யா (65) தம்பதி, வீட்டின் முன்பகுதியில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்துவந்தனா்.

கடந்த 2025 மே 11-ஆம் தேதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பாஸ்கரன் மதிய உணவுக்காக வீட்டுக்குள் சென்றவா் நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த கடைக்கு வந்தவா்கள் வீட்டின் உள்ளே பாா்த்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, பாஸ்கரன், அவரது மனைவி வித்யா இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றனா். ஆனால், வித்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த பாஸ்கரன் சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த வடமாநில இளைஞா் சந்தோஷ் (32), நகைக்காக இருவரையும் சுத்தியலால் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரிடமிருந்து பத்தேகால் பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சந்தோஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 1500 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். மேலும், இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.