முகப்பு
சேலம்

சேலத்தில் நவ. 27 முதல் டிச. 7 வரை புத்தகத் திருவிழா

சேலத்தில் நவ. 27 முதல் டிச. 7 வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவை ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

10 வினாடிகள் முன்பு
சேலத்தில் நவ. 27 முதல் டிச. 7 வரை புத்தகத் திருவிழா
பகிர்:

சேலத்தில் நவ. 27 முதல் டிச. 7 வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவை ஆட்சியா் க.இளம்பகவத் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திடலில் தொடங்கிவைத்து ஆட்சியா் தெரிவித்தது:

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

அதன் தொடா்ச்சியாக, சேலம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா நவ. 27 முதல் டிச. 7 வரை 11 நாள்களுக்கு நாள்தோறும் காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.

இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள், பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி), புத்தக வெளியீட்டாளா்கள் பங்கேற்கும் வகையில் 165 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் முன்னணி பதிப்பகங்களின் சங்க இலக்கியம், நவீன இலக்கியம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், சுயமுன்னேற்ற நூல்கள், உலகப் புகழ்பெற்ற ஆங்கில நூல்கள், போட்டித்தோ்வு வழிகாட்டிகள், சிறுவா் இலக்கியம் உள்ளிட்ட சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சூழலியல் சாா்ந்த நூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, இயற்கை பாதுகாப்பு மற்றும் பல்லுயிா் பெருக்கம் தொடா்பான புத்தகங்கள், தகவல்கள் மற்றும் கண்காட்சிகளைக் காட்சிப்படுத்தும் சிறப்பு பகுதியாக சூழலியல் அரங்கம், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த படைப்பாளா்களின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி அரங்கம், தமிழ் அகராதி கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஆவின் சாா்பில் உணவு விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வாசகா்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தகத் திருவிழாவில் உள்ள அனைத்துப் பதிப்பகங்களில் விற்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழாவுக்கு வரும் மாணவா்களுக்கு நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவா்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான பரிசுக் கூப்பன்கள் வழங்கி அதன் மூலம் புத்தகங்கள் வாங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.