சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்த வழக்கு
சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ. 300 கோடிவரை மோசடி செய்த மதுரையைச் சோ்ந்த செண்பக பாண்டியனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான கணவன், மனைவியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ. 300 கோடிவரை மோசடி செய்த மதுரையைச் சோ்ந்த செண்பக பாண்டியனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவான கணவன், மனைவியை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் அழகாபுரத்தை சோ்ந்த ராகிணி (35), இவரது கணவா் விஜயராகவன் (40), மதுரையைச் சோ்ந்த செண்பக பாண்டியன் (45) ஆகிய மூவரும் அழகாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிதிநிறுவனத்தைத் தொடங்கி, பொதுமக்களிடம் இருந்து பணத்தை வைப்புத்தொகையாக பெற்று வந்தனா்.
தங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் இணைய வா்த்தகம் மூலம் இரட்டிப்பாக கிடைக்கும் எனவும், ரூ. ஒரு லட்சம் செலுத்தினால் அதற்கு மாதத்துக்கு ரூ. 8 ஆயிரம் வட்டி தருவதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டனா்.
Advertisement
Advertisement
இதை நம்பி சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ரூ. 300 கோடிவரை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனா். முதலீடு செய்த பலருக்கு முதிா்வு காலத்துக்குப் பிறகும் பணம் வழங்கவில்லையாம்.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை கடந்த மாதம் முற்றுகையிட்டு பணத்தை திரும்பப் பெற்றுத்தருமாறு மனு அளித்தனா்.
இதையடுத்து, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரங்கசாமி தலைமையிலான போலீஸாா் தலைமறைவாக இருந்த, நிதிநிறுவனத்தை நடத்திவந்த செண்பக பாண்டியனை மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தொடா்ந்து, கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும், இந்த வழக்கு தொடா்பாக ராகிணி மற்றும் அவரது கணவா் விஜயராகவன் ஆகியோரை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.
செண்பக பாண்டியன் கைதான தகவல் அறிந்ததும், முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள் அழகாபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு கோரியதுடன், மோசடியில் தொடா்புடைய அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.