FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாநிதி மறைவு: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதி ஊர்வலம் சென்றும், மொட்டை அடித்தும் திமுகவினர் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதி ஊர்வலம் சென்றும், மொட்டை அடித்தும் திமுகவினர் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம்: இங்கு திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி துணைவேந்தர் சு.நடராஜன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு, தமிழகத்திற்கு பெரும் இழப்பு. 5 முறை தமிழக முதல்வராக இருந்து, பொதுமக்களுக்காக பல அரிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக, இடஒதுக்கீடு, ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம், சமத்துவபுரம், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் போன்ற திட்டங்களால் மக்கள் மத்தியில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலைக் கழகப் பதிவாளர் வி.பி.ஆர்.சிவகுமார், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
எம்.வாடிப்பட்டி: வத்தலகுண்டு அடுத்துள்ள எம்.வாடிப்பட்டி கிராமத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் உருவபடத்துடன் நடைபெற்ற மௌன ஊர்வலம் கிராம எல்லையில் முடிவடைந்தது. ஒன்றியச் செயலர் முருகன், பேரூர் செயலர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 திமுக தொண்டர்கள் பலர் மொட்டை அடித்துக் கொண்டனர். அதே போல் திண்டுக்கல் 14ஆவது வார்டு திமுக சார்பில், ஒய்எம்ஆர்.பட்டி பகுதியில் 5 திமுகவினர் மொட்டை அடித்துக் கொண்டனர்.  திண்டுக்கல் அடுத்துள்ள மா.மூ.கோவிலூர், வத்தலகுண்டு அடுத்துள்ள ஜி.தும்மலப்பட்டி, கட்டகாமன்பட்டி, விராலிப்பட்டி, வத்தல்பட்டி கிராமங்களைச் சேர்ந்த திமுகவினர் பலர் மொட்டை  அடித்துக் கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்: இங்கு திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் சார்பில் புதன்கிழமை மௌன ஊர்வலம் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நகரில் ஆட்டோ, கார் இயங்கவில்லை. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் திமுக நகர செயலர் ப.வெள்ளைச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சியினர் கலந்து கொண்ட மௌன ஊர்வலம் நடைபெற்றது. தாராபுரம் சாலையில் தொடங்கிய ஊர்வலம் பழனி சாலை வழியாக பேருந்து நிலையம் வரை சென்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  இதில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பழனி: பழனியில்  பல இடங்களிலும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. அடிவாரம் மயிலாடும்பாறை பகுதியில் ஏராளமான பெண்கள் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். பச்சளநாயக்கன்பட்டியில் கட்சியினர்  மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். பழனியில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அரசு மருத்துவமனை முன் தொடங்கிய இந்த ஊர்வலம் பேருந்து நிலையம், கடை வீதி, மாரியம்மன் கோயில் வழியே சென்று பேருந்து நிலைய ரவுண்டானாவை வந்தடைந்தது. அங்கு இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தில்  திமுக முன்னாள் கவுன்சிலர்கள் செபாஸ்டியன், முருகபாண்டியன், அதிமுக நகரச் செயலர் முருகானந்தம், அமமுக நகரச் செயலர் கணேசன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலர் ஆசிரியர் சுந்தரம், த.மா.கா. நகரச் செயலர் சுந்தர், நிர்வாகி தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
கடைகள் அடைப்பு: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கடைகள் அடைக்கப்பட்டதாலும், அரசு அலுவலகங்கள் இயங்காததாலும், போக்குவரத்து முடங்கியதாலும் பழனி நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
இங்கு கடைவீதி, சன்னதி வீதி, அடிவாரம் என அனைத்துப் பகுதிகளிலும் பெட்ரோல் நிலையம் முதல் சிறிய கடைகள் கூட அடைக்கப்பட்டதால் பக்தர்கள், பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. மலைக்கோயிலிலும் வெளியூர் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இரவு 7 மணிக்கு மேல் ஆங்காங்கே தேநீர் கடைகள், சிறிய உணவு விடுதிகள் திறக்கப்பட்டன.வேடசந்தூர், விருவீடு, ஆத்தூர், கள்ளிமந்தையம், குஜிலியம்பாறை, நெய்க்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் திமுகவினர் அமைதி ஊர்வலம் சென்றனர். 
போக்குவரத்து முடங்கியது: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பேருந்து சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. அதேபோல், புதன்கிழமை மாலை வரையிலும், பேருந்து சேவை, ஆட்டோ, வேன் என அனைத்து போக்குவரத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், சிறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திரையரங்குகளில் அனைத்துக்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. திண்டுக்கல் நகரில் சில வங்கி கிளைகள் மட்டும் வழக்கம்போல் செயல்பட்டன.
கொடைக்கானல்: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கொடைக்கானலில் உள்ள திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள், சங்கங்கள், வியாபாரிகள் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஏரிச்சாலைப் பகுதியான கலையரங்கத்திலிருந்து தொடங்கி நகராட்சி சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, கே.சி.எஸ். திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 மேல்மலைக் கிராமங்களான மன்னவனூர், கிளாவரை, கூக்கால், குண்டுபட்டி, ஏ.காலனி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திமுகவினர் 20 பேர் மொட்டையடித்து திமுக தலைவர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதனிடையே கொடைக்கானல் பகுதிகளிலுள்ள உணவகங்கள், கடைகள், தங்கும் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் படகு குழாம் ஆகியவை செயல்படவில்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க வில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி சுற்றுலா இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments