FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அகில இந்திய தேர்வுகளில் பின்தங்கிய தமிழகத்தின் நிலையை புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கும்: பள்ளிக் கல்வித்துறை: செயலர் உதயச்சந்திரன்

அகில இந்திய தேர்வுகளில் பின்தங்கியுள்ள தமிழகத்தின் நிலையை புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கும்  என பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

அகில இந்திய தேர்வுகளில் பின்தங்கியுள்ள தமிழகத்தின் நிலையை புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கும்  என பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.
1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாட நூல்கள் குறித்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கருத்தாளர்களிடம் ( "க்யூஆர் கோடு' முறை தொடர்பாக பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள்) கருத்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தலைமை வகித்தார். 
 ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் பொன் குமார், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கலந்து கொண்ட கருத்தாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் விவரம்: அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த சூழலில் தற்போது அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள புதிய பாட நூல்களில், பாடங்களை விரைந்து     நடத்த முடியவில்லை. மேலும், பாடங்களில் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த தொடர்பு இல்லை. உலகம் உருவானதற்கான விளக்கம் அறிவியல் பாடத்தில் மட்டுமின்றி சமூக அறிவியல் பாடத்திலும் இடம் பெறவில்லை. எழுத்துப் பிழைகளும் உள்ளன. தமிழ் பாடத்தில் செய்யுள் பகுதியில் அந்தந்த பாடல்களுக்கான ஆசிரியர்களின் ஊர், பெற்றோர் உள்ளிட்ட விவரங்கள் இல்லை. 
சமூக அறிவியல் பாடத்தில், பழமை குறித்து விளக்குவதற்கு தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த குறீயிடுகள், கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் ஆசிரியர்கள் (கருத்தாளர்கள்) தரப்பில் பதிவு செய்யப்பட்டன. 
இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் பேசியது:  நாட்டிலேயே முதன்முறையாக, "க்யூஆர் கோடு' முறையில் பாடப்புத்தகம் உருவாக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டுமே. தமிழகத்தில் நாளொன்றுக்கு 1.5 முதல் 2 லட்சம் பேர் வரை "க்யூஆர் கோடு' மூலமாக பாடங்களை பதிவிறக்கம் செய்கின்றனர். சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்கள் திராவிடர்கள் என்ற கருத்து தற்போதும் ஆய்விலேயே இருந்து வருகிறது. புதிய பாடத் திட்டத்தை பொருத்தவரை, வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு கருத்தும் இடம் பெற்றுள்ளது. 
 பொதுவாக 3 நிமிடங்களுக்கு மேல் இ-குறிப்புகளை தொடர்ந்து வாசிக்க முடியாது. அதன் அடிப்படையிலேயே பாடத்தில் குறைவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 
 பாடப் புத்தகத்தில் ஆண்டுகள் மற்றும் எண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும்போது, புரிந்து படிப்பதற்கு மாறாக மனனம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனை தவிர்ப்பதற்கான முயற்சிகள் புதிய பாடத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
மூத்த மொழியான தமிழை, சமஸ்கிருத்தின் மூலம் நிலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை.  அகில இந்திய தேர்வுகளில் பின் தங்கியுள்ள தமிழகத்தின் நிலையை, புதிய பாடத் திட்டம் உறுதியாக மாற்றி அமைக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடங்களிலிருந்தே வினாக்கள் இடம் பெற்றுள்ளன. அதில் 99 சதவீத வினாக்கள் , புதிய பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. குடிமைப் பணித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலேயே பிளஸ் 1 அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் புவியியல் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments