FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத வளர்பிறையில் 11ஆவது நாளில் வரும் ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஏகாதசிக்கு முந்திய 10 நாள்களை பகல் பத்து (திருமொழி திருநாள்) எனவும், பின்வரும் 10 நாள்களை ரா பத்து (திருவாய் மொழி திருநாள்) எனவும் கருதி, பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
வைகுண்ட ஏகாதசி நாளின் முக்கிய நிகழ்வாக பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள வைணவத் தலங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. 
அதன்படி, திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துக்கு இடையே, பரமபத வாசல் வழியாக  ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி, நம்மாழ்வார், ராமானுஜம் உள்ளிட்டோருக்கு காட்சி அளித்தார். பின்னர், மண்டபத்துக்கு திரும்பிய பெருமாளை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 
தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள்: திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின், பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக எழுந்தருளிய சௌந்தரராஜப் பெருமாளை, கோவிந்தா முழக்கங்களுக்கிடையே பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
இதேபோல், திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் மற்றும் ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்கப் பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சின்னாளப்பட்டி ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சேநேயருக்கு திருப்பதி ஏழுமலையான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 
பழனி: தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு  சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை மூன்று மூலவருக்கும் சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அலங்காரம் நடைபெற்றது.  தொடர்ந்து, பரமபத வாசலுக்கு புண்யாவாஜனம் நடைபெற்றது. கருட வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய இலக்குமி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, பாசுரங்கள் சேவிக்கப்பட்டன.
பின்னர், பெருமாள் பரமபத வாசல் வழியே எழுந்தருளினார். அவருக்கு மேளதாளம் முழங்க எதிர்சேவை வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியே வந்து பெருமாளை தரிசித்தனர். அதையடுத்து, பெருமாள் 4 ரத வீதிகளில் உலா எழுந்தருளினார். 
பழனியை அடுத்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்த அகோபில வரதராஜப் பெருமாளுக்கு எதிர்சேவை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி நான்கு ரத வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்க வாசல் திறப்பு விழாவில், பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் முருகேசன், திருப்பூர் லாட்ஜ் மகேஷ், கான்ட்ராக்டர் நேரு, புஷ்பகைங்கர்ய சபா செயலர் மருதமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
கொடைக்கானல்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கொடைக்கானல் அண்ணா சாலையிலுள்ள பெருமாள் கோயில் மற்றும் பெருமாள் மலையிலுள்ள பெருமாள் கோயில் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments