ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.9.85 கோடி செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தானியங்கி மின்மோட்டார்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.9.85 கோடி செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தானியங்கி மின்மோட்டார் இயந்திரங்களை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஒருங்கிணைந்த நகரப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விருப்பாச்சி தலையூற்றில் இருந்து ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகம் வரை 8 கிலோ மீட்டர் தூரம் புதிதாக குடிநீர் குழாய் அமைத்து, விருப்பாச்சி தலையூற்றில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தானியங்கி மின்மோட்டார் இயந்திரம் பொருத்தி குடிநீர் விநியோகிக்க ரூ.9.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அதில் ஒரு இடத்தில் ரயில்வே கடவுப்பாதையும், மற்றொரு இடத்தில் நெடுஞ்சாலையும் சென்றதால், அப்பகுதிகளில் குழாய் பதிக்க ரயில்வேத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் இப்பணியை நிறைவு செய்ய 2 ஆண்டு காலம் வரை ஆனது. இப்பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினசரி 45 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் ம.இளவரசன், இளநிலை பொறியாளர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடைபெறும் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தானியங்கி மின்மோட்டார் இயந்திரங்களை ஆய்வு செய்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் ம.இளவரசன் கூறியதாவது: இந்நகராட்சிப் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முழுமையடைந்ததும் 3 நாள்களுக்கு ஒருமுறை 18 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் கிடைக்கும். இந்த நீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.