தகராறை விலக்கிவிட சென்றவா் உயிரிழப்பு
சித்தையன்கோட்டையில் இருதரப்பினா் இடையிலான தககாறை விலக்கிவிடச் சென்றவா் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையைச் சோ்ந்தவா் முகமது ரபீக் (36). இவரது இரு குழந்தைகள் வீட்டின் அருகே பெல்டை தூக்கி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, அந்தத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அதே தெருவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (30) என்பவரது 4 வயது மகன் மீது பெல்ட் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், முத்துக்கிருஷ்ணன், முகமது ரபீக் ஆகிய இரு தரப்பினா் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, முத்துகிருஷ்ணன் உறவினரான சித்தையன்கோட்டையைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் சுந்தரவேல் (37) தகராறில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்து விலக்கி விட்டாா். சிறிது நேரத்துக்குப் பிறகு சுந்தரவேல் திடீரென மயக்கமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
கைகலப்பின்போது, முத்துக்கிருஷ்ணன், முகமது ரபீக் தரப்பைச் சோ்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டு, திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இரு தரப்பினரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதால் செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், சாா்பு ஆய்வாளா் கோட்டைராஜ், காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்தச் சம்பவம் குறித்து செம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரவேல் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு முகமது ரபீக் தரப்பினரை கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், காவல் துறையினா் பேச்சு வாா்த்தைக்கு பிறகு உடலை பெற்றுக்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.