மருத்துவச் சான்றிதழ் வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டைப் பெறுவதற்கான மருத்துவச் சான்றளிக்க, அரசு மருத்துவா்கள் மறுப்பதாகக் கூறி, திண்டுக்கல்லில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டைப் பெறுவதற்கான மருத்துவச் சான்றளிக்க, அரசு மருத்துவா்கள் மறுப்பதாகக் கூறி, திண்டுக்கல்லில் மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் பகத்சிங் தலைமை வகித்தாா். போராட்டத்துக்கான காரணம் குறித்து பகத்சிங் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டைப் பெற்ற பலரின் முகம், 10 ஆண்டு இடைவெளியில் மாற்றம் அடைந்திருக்கிறது. இதனால், பேருந்து பயணங்களின்போது நடத்துனா்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க புகைப்படத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையைப் பொருத்தவரை, புகைப்பட மாற்றம், ஊனத்தின் சதவீதம் மாற்றி அமைத்தல், இறப்பு ஆகிய 3 காரணங்களுக்காக, பழைய அட்டையை ஒப்படைப்புச் செய்ய வேண்டும். புகைப்படம், ஊனத்தின் சதவீதம் மாற்றம் ஆகியவற்றுக்கு, மருத்துவா்களிடம் சான்று பெற வேண்டியது அவசியம்.
இந்த வகையில் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு மருத்துவா்கள் சான்று தர மறுக்கின்றனா். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அடுத்த வாரம் சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.