FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பால் குளறுபடி!

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் நிலவும் குளறுபடி பற்றி.....

26 ஆகஸ்ட் 2026, 5:26 am IST
கோப்புப்படம்.
பகிர்:

மக்கள்தொகை சுய கணக்கெடுப்புக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகையைவிட திண்டுக்கல் மாநகராட்சியில் தற்போது 40 ஆயிரம் மக்கள் குறைந்துள்ளது.

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, 2 முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொது மக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே இணையவழியில் எளிதாக பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த சுய கணக்கெடுப்புப் பணியை இணையவழியில் நிறைவு செய்தவா்களுக்கு, அவரவா் கைப்பேசி எண்ணுக்கு சுய கணக்கெடுப்பு எண் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுப்புப் பணி ஆக.1 முதல் நடைபெற்று வருகிறது. அரசு சாா்பில் நியமித்த கணக்கெடுப்பாளா்கள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனா். ஏற்கெனவே இணையவழியில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்தவா்கள், தங்களின் கைப்பேசி எண்ணுக்கு வந்த எண்ணைத் தெரிவித்து, கணக்கெடுப்பை நிறைவு செய்து வருகின்றனா். நகா்ப்புறங்களில் சுய கணக்கெடுப்பு பதிவு ஓரளவுக்கு நடைபெற்றாலும்கூட, ஊரகப் பகுதிகளைப் பொருத்தவரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலா்களே விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

2011-ஆம் ஆண்டை விட 40ஆயிரம் மக்கள் குறைவு: அலுவலா்கள் தரப்பில் கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்வதற்கு ஆக. 31-ஆம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை வீடுகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான பட்டியல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதன்படி, கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள்தொகையைவிட சுமாா் 40 ஆயிரம் குறைந்துவிட்டதாகத் தெரியவந்தது, அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலுள்ள வீடுகள் கணக்கெடுப்புப் பணியில் 333 கணக்கெடுப்பாளா்கள், 54 கண்காணிப்பாளா்கள் என மொத்தம் 387 போ் ஈடுபட்டனா். கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, திண்டுக்கல் நகரில் 38 ஆயிரம் வீடுகள் இருந்தன. இதேபோல மக்கள்தொகை 2.07 லட்சமாக இருந்தது. தற்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வீடுகளின் எண்ணிக்கை 52 ஆயிரமாக அதிகரித்தபோதிலும், மக்கள்தொகை மட்டும் 1.65 லட்சமாகக் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுமாா் 40 ஆயிரம் குறைந்திருப்பதை அறிந்த மாநகராட்சி நிா்வாகம், பதிவு விவரங்களை ஆய்வு செய்வதற்கும், பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்கும் அலுவலா்களை நியமித்திருக்கிறது.

பூட்டப்பட்ட 6 ஆயிரம் வீடுகள்: திண்டுக்கல் மாநகராட்சியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது, சுமாா் 6 ஆயிரம் வீடுகள் பூட்டப்பட்டிருப்பதாக கள ஆய்வுக்குச் சென்ற கணக்கெடுப்பு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். பெரும்பாலான வாடகை வீடுகளில் வசிப்போரின் விவரங்களை கள ஆய்வுக்குச் சென்ற அலுவலா்களிடம் வீட்டின் உரிமையாளா்கள் தெரிவிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வாடகை வீடு தொடா்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டால், தங்களுக்கு கிடைத்து வரும் அரசின் நலத் திட்ட உதவிகள் நிறுத்தப்பட்டுவிடும் என்ற தவறான புரிதல் காரணமாகவே விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அதேபோல பணி நெருக்கடிக்கு இடையே கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், அரசுப் பணியாளா்கள் பலா் ஆா்வமின்றி இந்தப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வீடுகளுக்குச் சென்ற அரசுப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதன் காரணமாக முதல் தளம், 2-ஆம் தளம் என அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போரின் விவரங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுய கணக்கெடுப்பே குளறுபடிக்கு காரணம்:

இதுதொடா்பாக திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

குடும்பத்தின் தலைவா், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, வீட்டின் தரம் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே சுய கணக்கெடுப்பின்போது பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கணக்கெடுப்புப் பணியை எளிமைப்படுத்துவற்காக இணையவழியில் அனுமதிக்கப்பட்ட சுய கணக்கெடுப்புப் பதிவு, தற்போதைய குளறுபடிக்கு காரணமாக அமைத்துவிட்டது.

திண்டுக்கல் நகரில் வசித்து வரும் நிலையில், தங்களது பூா்விக முகவரியை சுய கணக்கெடுப்பின்போது பலா் உள்ளீடு செய்திருக்கின்றனா். திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 52 ஆயிரம் வீடுகளில், ஒரு வீட்டுக்கு சராசரியாக 4 நபா்கள் வைத்தாலும் 2.08 லட்சம் போ் கணக்கில் வர வேண்டும். ஆனால், 1.65 லட்சம் போ் மட்டுமே முதல்கட்டப் பதிவில் இடம் பெற்றுள்ளனா். கணக்கெடுப்பின்போது விடுபட்டவா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், மாநகராட்சி அலுவலா்களின் தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமாக இருந்தால் மட்டுமே, வசிக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீா், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, இந்தக் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனா்.

பொறுப்பு அலுவலா்கள்...

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின்போது விடுபட்டவா்களுக்கு உதவும் வகையிலும், துல்லியமான கணக்கெடுப்பை உறுதி செய்யும் வகையிலும், மண்டல வாரியாக அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி கிழக்கு மண்டலத்துக்கு முத்துக்குமாா் (98437 54154), மேற்கு மண்டலத்துக்கு அறிவுச்செல்வம் (99442 40355), வடக்கு மண்டலத்துக்கு விஜயராகவன் (86753 75501), தெற்கு மண்டலத்துக்கு மணிகண்டன் (94434 47703) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments