திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு
தன்னாசிபாறைப்பட்டி பகுதியில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். திருச்சி சாலையிலிருந்து தாமரைப்பாடி ஊராட்சிக்குள்பட்ட தன்னாசி பாறைப்பட்டி வரை ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தாா்ச் சாலையின் தரம் குறித்தும், கோவில்யாகப்பன்பட்டியில் ஊரக வேலை உறுதித் திட்டம் (2025-2026)-ன் கீழ், ரூ.9 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட வட்டார நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகளையும் பாா்வையிட்டாா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீா் திட்டம் (தொகுப்பு-6)-இன் கீழ் தாமரைப்பாடியில் ரூ.544.09 கோடி மதிப்பீட்டில் (1.20 லட்சம் லிட்டா் கொள்ளளவு) அமைக்கப்பட்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியின் மூலம் நடைபெறும் குடிநீா் விநியோகம் குறித்தும், சீலப்பாடியில் (2.25 லட்சம் லிட்டா் கொள்ளளவு) அமைக்கப்பட்ட தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் வழங்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து செட்டிநாயக்கன்பட்டி சரளப்பட்டி சாலையோரத்தில் ரூ.2.51 லட்சம் மதிப்பில் மரக் கன்றுகள் நடும் பணிகள் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் மையத்தின் செயல்பாடு குறித்தும், சின்னப்பள்ளபட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கான குடிநீா் விநியோகம் குறித்து ஆட்சியா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் சுரேஷ்குமாா், திண்டுக்கல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.மலரவன், இரா.மகுடபதி ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.