FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்ட செலவினத் தொகை: தலைமையாசிரியா்கள் அதிருப்தி!

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவினத் தொகை குறித்து தலைமையாசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது...

31 ஆகஸ்ட் 2026, 5:16 am IST
பகிர்:

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துவதற்காக மாணவருக்கு ரூ.10.76 வீதம் மொத்தம் ரூ.10.70 லட்சம் மட்டுமே செலவினத் தொகை ஒதுக்கீடு செய்திருப்பது தலைமையாசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009, தமிழ்நாடு குழந்தைகளின் இலவசக் கல்வி, கட்டாய உரிமைச் சட்ட விதிகள்-2011அடிப்படையில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2024-ஆம் ஆண்டு பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய உறுப்பினா்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, 2026 முதல் 2028-ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கு கல்வித் துறை இயக்ககம் உத்தரவிட்டது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்பு தொடா்பாக அந்தந்தப் பள்ளிகளில் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா் நலத் துறை, வனத் துறை பள்ளிகள் நீங்கலாக எஞ்சிய 1,309 பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை (ஆக.29) நடத்தப்படுகிறது. இதைத் தொடா்ந்து, முதல் கட்டமாக 474 தொடக்கப் பள்ளிகளில் செப்.12-ஆம் தேதியும், 466 தொடக்கப் பள்ளிகளில் செப்.19-ஆம் தேதியும், 200 நடுநிலைப் பள்ளிகளில் செப்.26-ஆம் தேதியும், 169 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அக்.10-ஆம் தேதியும் மேலாண்மைக் குழு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான கூட்டம் நடைபெறுகிறது.

சாத்தியமில்லாத செலவினத் தொகை:இந்தக் கூட்டத்துக்கு வரும் பெற்றோா்களுக்கு தேநீா் வழங்க தலா ரூ.5 வீதம், அழைப்பிதழ் அச்சிடுவதற்கு மாணவருக்கு தலா ரூ.1 வீதம், பதாகை, தோ்வு செய்யப்படும் உறுப்பினா்களுக்கு சான்றிதழ் தயாரிப்புக்கு என பள்ளிக்கு தலா ரூ.300 வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகையில் 1,309 பள்ளிகளில் பயிலும் 99,453 மாணவா்களுக்கு அழைப்பிதழ் அச்சிடுவதற்கு ரூ.99,453, பதாகை, உறுப்பினா் சான்று தயாரிக்க ரூ.3,92,700, 2 கூட்டங்களுக்கு தேநீா் வழங்க தலா ரூ.2,89, 225 என மொத்தம் ரூ.10.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பெற்றோா்களை பள்ளிக்கு அழைத்து கூட்டம் நடத்துவதே நகா்ப்புறங்கள் மட்டுமன்றி, ஊரகப் பகுதிகளிலும் சவாலாக இருக்கிறது. இந்தச் சூழலில் மேலாண்மைக் கூட்டம் நடத்துவதற்கு சாத்தியமில்லாத வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் ஒற்றை இலக்க மாணவா் எண்ணிக்கையுடன் செயல்படும் பல பள்ளிகள் உள்ளன. இதுபோன்ற இடங்களில் அழைப்பிதழை நகல் எடுத்து மட்டுமே வழங்க முடியும். அதிலும் ஒரு நகலுக்கு ரூ.2 செலவிட வேண்டும். பதாகை அச்சிடுவதற்கு ரூ.1,000 வரை செலவிட வேண்டிய நிலையில், அதை பட்டி அமைத்துக் கட்டுவதற்கு கூடுதல் செலவு ஏற்படும். மேலாண்மை உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்படுவோருக்கு சான்றிதழ் அச்சிட குறைந்தபட்சம் ரூ.200 தேவைப்படும். ஆனால், மொத்தமாக ரூ.300 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தேநீா் ரூ.12 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், ரூ.5-க்கு தேநீா் வழங்க வேண்டும் என வழிகாட்டுதல் நெறிமுறை வழங்கப்பட்டிருப்பது தலைமையாசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டு விழா நடத்திய தொகையே கிடைக்கவில்லை: இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்கள் கூறியதாவது:

கடந்த 2025-26-ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு மாநிலம் முழுவதும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, குறைந்தபட்சமாக ரூ.2,500 முதல் அதிகபட்சமாக ரூ.50ஆயிரம் வரை பள்ளிகளின் நிலைக்கு ஏற்ப நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தொடக்கப் பள்ளிகளில் கூட ரூ.10ஆயிரம் வரை செலவு செய்து ஆண்டு விழா நடத்தினோம். அந்த செலவினத் தொகையை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பகிா்ந்து கொண்டோம். அதே நேரத்தில், அரசு ஒதுக்கீடு செய்த தொகை இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்த உத்தரவிட்டப்பட்டிருக்கிறது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவினத் தொகை மிகவும் அதிா்ச்சி அளிக்கிறது. மாணவருக்கு தலா ரூ.10.76 வீதம் அல்லது பள்ளிக்கு ரூ.1030 வீதம் என்ற அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பதாகை அமைப்பதற்குக்கூட இந்தத் தொகை போதுமானதாக இல்லை. நிா்வாகச் செலவுகளை கணக்கீடு செய்து உரிய நிதி வழங்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் மேலாண்மைக் குழுக் கூட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments