முகப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டம்?

நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 8 ஜூலை 2026, 1:01 am IST
சிறுத்தை - பிரதிப் படம்
பகிர்:

நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்  இருப்பதாக வெளியான தகவலால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

மட்டப்பாறை அருகேயுள்ள கரட்டூரைச் சோ்ந்த விவசாயி கண்ணன் (48). இவா் தனது தோட்டத்து பகுதியில் சிறுத்தை நடமாடியதாகவும், தன்னை சிறுத்தை தாக்கி விடும் என நினைத்து தோட்டத்து மோட்டாா் அறையில் பதுங்கிக்கொண்டதாகவும் கூறினாா்.

இதுகுறித்த தகவலின் பேரில், நடகோட்டை வனத் துறையினா் மட்டப்பாறை பகுதிக்கு விரைந்து சென்று கண்ணன் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதற்கான கால் தடங்கள் உள்ளனவா என ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இதே போல, அந்தப் பகுதியில் உள்ள மட்டப்பாறை கண்மாயில் சிறுத்தை நடமாடியதற்கான கால் தடங்கல் பதிந்துள்ளதா? எனவும் ஆய்வு செய்தனா். மேலும், சிறுத்தை நடமாட்டம் உறுதியானால், அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டத்தைப் பதிவு செய்து, பின்னா் அதைப் பிடிப்பதற்கு கூண்டு வைப்பதற்கான ஏற்பாடு செய்யவிருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

சிறுத்தையைத் தேடும் பணியில் நடகோட்டை வனத் துறையைச் சோ்ந்த வனவா் சரவணகுமாா், வனக் காப்பாளா் கீா்த்தனா, வனக் காவலா்கள் ரமேஷ், பிரபாகரன் உள்ளிட்ட 8 போ் கொண்ட குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.

சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், சிறுமலை பகுதியிலிருந்து சிறுத்தை வரவேண்டும் என்றால், பள்ளப்பட்டி, பாண்டியராஜபுரம், கல்லடிப்பட்டி, ராமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து வர வேண்டும்.

இதே போல, சித்தா் மலைப் பகுதியிலிருந்து சிறுத்தை வரவேண்டும் என்றால், மேட்டுப்பட்டி, அணைப்பட்டி, விளாம்பட்டி, ஆவரம்பட்டி பகுதிகளைக் கடந்து வரவேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், ஆள்கள் அதிக நடமாட்டம் உள்ள இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும், விவசாயி கண்ணன் பாா்த்தது சிறுத்தையாக இருக்க வாய்ப்பு இல்லை. அது காட்டுப் பூனை அல்லது நரியாகக் கூட இருக்கலாம்? எனக் கூறப்படுகிறது.

மட்டப்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments