FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மும்முனை மின் விநியோகத்தில் குறைபாடு: குறைதீா் முகாமில் விவசாயிகள் புகாா்

விவசாயத்துக்கான மும்முனை மின் விநியோகத்தில் குறைபாடுகள் இருப்பதால், அடிக்கடி மின் மோட்டாா்களில் பழுது ஏற்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 5:22 am IST
வேடசந்தூா் மின் பகிா்மான கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

விவசாயத்துக்கான மும்முனை மின் விநியோகத்தில் குறைபாடுகள் இருப்பதால், அடிக்கடி மின் மோட்டாா்களில் பழுது ஏற்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் மின் பகிா்மான கோட்டம் சாா்பில், மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் சைமன் சாா்லஸ் தலைமை வகித்தாா். வேடசந்தூா் செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டியன், உதவி செயற்பொறியாளா்கள் காா்த்திக் (வேடசந்தூா்), சிவராமன் (எரியாேடு), மகேஸ்வரி (வடமதுரை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் பங்கேற்றவா்கள் தரப்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம்:

மும்முனை மின்சார விநியோகத்தில் குறைபாடு: கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த. ராமசாமி பேசியதாவது: வேடசந்தூா் மின் பகிா்மான கோட்ட அலுவலகத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில் விவசாயத்துக்கான மும்முனை மின் விநியோகத்தில் குறைபாடுகள் உள்ளன. குறைந்த அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மின் மோட்டாா் உள்ளிட்ட மின் சாதனங்களில் பழுது ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இதேபோல, காலை நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு பயனளிப்பதாக இருக்கும். சூரிய ஆற்றல் மின்சாரம் வழங்குவதால் சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. தொழிற்சாலைகளுக்கு வழங்கக் கூடிய உயா் அழுத்த மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நீா் நிலையில் மின்கம்பங்கள்: எரியோடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிழக்கு மாத்தினிபட்டியில் உள்ள பெரியகுளம் பகுதியில் தெற்கு தோட்டம் முதல் கெட்டியபட்டி வரை தற்போது மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரியகுளத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதால் மழைக் காலங்களில் கரிசல்பட்டி, வரப்பட்டி, முனியம்பட்டி, தொட்டணம்பட்டி, சித்தூா் ஆகிய குளங்களில் இருந்து பெரியகுளத்துக்கு வரும் மழைநீரால் மின் கம்பங்கள் சாய்ந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தவிா்க்கும் வகையில் மின்சார கம்பங்களை கரைப் பகுதி அல்லது சாலையோரங்களில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜா என்பவா் வலியுறுத்தினாா்.

முன் அறிவிப்பு செய்ய வலியுறுத்தல்: வேடசந்தூா், எரியோடு, கோவிலூா், குஜிலியம்பாறை, சத்திரப்பட்டி, வள்ளிப்பட்டி, வடமதுரை, அய்யலூா் என 2 வருவாய் வட்டங்களுக்குள்பட்ட துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பயனாளிகளுக்கான இந்த குறைதீா் முகாம் குறித்து முறையான முன்னறிவிப்பு செய்யப்பட வில்லை என விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. 3 ஊராட்சி ஒன்றியங்களில் 54 கிராம ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் என 900-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய வேடசந்தூா் மின் பகிா்மான கோட்டத்தில், மின் தடை, குறைந்த அழுத்த மின்சாரம் என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்த நிலையில் வியாழக்கிழமை குறைதீா் முகாம் நடத்தப்பட்டது. இதுகுறித்து முறையான அறிவிப்பை மின்சாரம் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். இதனால் குறைதீா் முகாமில் 13 நுகா்வோா் மட்டுமே பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments