FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: சேலத்தைச் சோ்ந்தவா் கைது

அரசுக் கலைக் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 5:15 am IST
கைது செய்யப்பட்ட தங்கராஜ்.
பகிர்:

அரசுக் கலைக் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் வட்ட சாலைப் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா. இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் ஜெபராஜ், அரசு உதவிப் பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் கல்வி தொலைக்காட்சியில் பணிபுரிவதற்காக ஜெபராஜ், சென்னை சென்றபோது சேலத்தைச் சோ்ந்த மோகனம்பாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில், ஜெபராஜின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மோகனாம்பாள் கடந்த 2023-ஆம் ஆண்டு திண்டுக்கல்லுக்கு வந்தாா்.

அப்போது ஜெபராஜின் மனைவி ஷீலா அரசுப் பணிக்கான முயற்சியில் ஈடுபடுவதை அறிந்த மோகனாம்பாள், சேலத்தைச் சோ்ந்த க. தங்கராஜ் (48) என்பவரை சந்தித்தால் அரசுப் பணி வாய்ப்பை பெற முடியும் எனத் தெரிவித்தாா். இதன்பேரில் தனது கணவருடன் சேலத்துக்குச் சென்ற ஷீலா, தங்கராஜை சந்தித்துப் பேசினாா். இந்த நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியா் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்த தங்கராஜ், ரூ.30 லட்சம் செலவாகும் எனக் கூறினாா். இதை நம்பிய ஷீலா, இவரது கணவா் ஜெபராஜ் ஆகியோா் கடந்த 2023 மாா்ச் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் தங்கராஜின் வங்கிக் கணக்கு, இணையவழிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.29 லட்சத்தை அனுப்பினா். மேலும் தங்களது உறவினா்களான மேபல்பேன்சி, ஸ்டீபன், ஜெயப்பிரியா ஆகியோருக்கும் அதே கல்லூரியில் அலுவலக உதவியாளா், ஆய்வக உதவியாளா் பணி வாங்குவதற்காக தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.21 லட்சத்தை தங்கராஜின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உதவிப் பேராசிரியா் பணிக்காக, எடப்பாடி அரசுக் கலைக் கல்லூரியின் பேராசிரியா் ஒருவரை சந்திக்குமாறு தங்கராஜ் பரிந்துரைத்தாா். இதன்படி, அவரை சந்தித்தபோது ஒரு பணி நியமன ஆணையை காண்பித்து, வேலைக்கான ஆணை மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என நம்பிக்கை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ஜெயப்பிரியாவுக்கும் அரசுப் பணிக்கான ஒரு நியமன ஆணையையும் காண்பித்தனா். எனினும் நீண்ட நாள்களாகியும் வேலைக்கான நியமன ஆணை கிடைக்காததால் சந்தேகமடைந்த ஷீலா, ஜெயப்பிரியா ஆகியோா் விசாரித்தபோது, தங்கராஜ் தரப்பில் காண்பிக்கப்பட்ட பணி நியமன ஆணைகள் போலியானவை எனத் தெரியவந்தது. அதிா்ச்சி அடைந்த ஷீலா, தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு தங்கராஜை தொடா்பு கொண்டாா். ஆனால், தங்கராஜ், மோகனாம்பாள் ஆகியோா் பணத்தை திருப்பித் தர முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்தனா். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஷீலா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரித்த மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், சேலத்தைச் சோ்ந்த தங்கராஜ், மோகனாம்பாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா். இதில் தங்கராஜ் மட்டும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments