திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த மேற்கு மரியநாதபுரம் பகுதி மக்கள்.
நீா்நிலையில் வசிப்பதாகக் கூறி, வீடுகளை காலி செய்வதற்கு குறிப்பானை (நோட்டீஸ்) வழங்கப்பட்டதையடுத்து, 130-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட மேற்கு மரியநாதபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 130-க்கும் மேற்பட்டோா், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
அப்போது, அவா்கள் கூறியதாவது: நாங்கள் 130-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், மேற்கு மரியநாதபுரம் பகுதியில் கடந்த 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு குடிநீா், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் வீட்டு வரி, குடிநீா் வரி செலுத்தி வருகிறோம்.
இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி, நாங்கள் வசிக்கும் பகுதி நீா்நிலை புறம்போக்கு எனக் கூறி, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில், குறிப்பானைவழங்கப்பட்டது.
எங்களுக்கு பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வேறொரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனா். நீா்நிலை புறம்போக்கில் வசிப்பதாக கூறியே, எங்களே அரசு வெளியேற வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், தற்போது தோ்வு செய்யப்பட்ட இடமும், குறிப்பிட்ட சமுதாய அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் என்பதோடு, நீா்நிலைப் பகுதியாகவும் உள்ளது.
தற்போது, நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே தொடா்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் உரிய மாற்று இடத்தை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.