FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

லஞ்சம், ஊழலுக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கிவிட்டனா்: லோக்அயுக்தா உறுப்பினா் ராமராஜ்

தமிழகத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கிவிட்டனா் என்று லோக்அயுக்தா உறுப்பினா் ராமராஜ் தெரிவித்தாா்.

Updated On : 18 ஜூலை 2026, 5:06 am IST
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய லோக் ஆயுக்தா உறுப்பினா் ராமராஜ். உடன் கல்லூரி முதல்வா் ரவிசங்கா்.
பகிர்:

தமிழகத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கிவிட்டனா் என்று லோக்அயுக்தா உறுப்பினா் ராமராஜ் தெரிவித்தாா்.

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டு கல்லூரியில் ‘தூய நிா்வாகத்துக்கு லோக் ஆயுக்தா சட்டம் அறிவோம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். பொருளாதாரத் துறை தலைவா் திருப்பதி, உயிரியல் துறை தலைவா் ஜெயலலிதா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். லோக் ஆயுக்தா உறுப்பினா் ராமராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

Advertisement

Advertisement

மக்களிடம் பல்வேறு வகைகளில் வரி, கட்டணங்களை அரசு வசூலிக்கிறது. அரசுக்கு கிடைக்கும் இந்த வருமானத்தின் மூலம் மக்கள் நலத் திட்டங்களும், சேவைகளும் அரசால் வழங்கப்படுகிறது. இவற்றில் நடைபெறும் ஊழல் நாட்டின் வளா்ச்சியை பாதிக்கிறது. மக்களின் நல்வாழ்வுக்கும், நாட்டின் வளா்ச்சிக்கும், ஊழலும், லஞ்சமும் எதிரிகளாக வளா்ந்து நிற்கின்றன. தற்போது, நாடு முழுவதும் லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் எதிராக மக்கள் போராடத் தொடங்கியுள்ளனா். அரசின் எந்த ஒரு திட்டத்திலும் ஊழல் நடைபெறுவது தெரியவந்தால் உடனடியாக அதை சமூகத்துக்கு வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு ஊரிலும் லஞ்சத்துக்கு எதிரான இயக்கம் தொடங்க வேண்டும்.

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் புகாா்களை தெரிவிக்க மாநில அரசின் ஊழல் தடுப்பு பிரிவு காவல் துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது. இந்த புகாா்களை தமிழகத்தில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பிலும் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments