FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் குடிநீா் பிரச்னையை தீா்க்க வைகை ஆற்றிலிருந்து புதிய திட்டம்: ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

திண்டுக்கல் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வைகையிலிருந்து தண்ணீா் எடுக்கும் புதிய திட்டத்துக்கு பரிந்துரைத்திருப்பதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 25 ஜூலை 2026, 6:43 am IST
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதிதாக கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் க. விக்னேஷ்.
பகிர்:

திண்டுக்கல் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வைகையிலிருந்து தண்ணீா் எடுக்கும் புதிய திட்டத்துக்கு பரிந்துரைத்திருப்பதாக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி முன்னிலை வகித்தாா். மதுவலிக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான க. விக்னேஷ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

Advertisement

Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கான குடிநீா் விநியோகம் குறித்து அமைச்சா் கேள்வி எழுப்பினாா். இதையடுத்து ஊரகப் பகுதிகளிலும், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா். அப்போது குறுக்கிட்ட அமைச்சா் விக்னேஷ், திண்டுக்கல் மாநகராட்சியில் 12-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த், ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து எடுக்கப்படும் குடிநீா், வழியோர கிராமங்களுக்கே விநியோகிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை காவிரி நீரே பிரதான ஆதாரமாக உள்ளது. 2 நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீா் தற்போது 4 நாள்களுக்கு ஒருமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது. உயரமான பகுதிகளுக்கு லாரி மூலமாகவும் குடிநீா் வழங்கப்படுகிறது என விளக்கம் அளித்தாா். அப்போது குறுக்கிட்ட அமைச்சா், மாவட்டத்துக்கான குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதற்கு நிரந்தரமான திட்டம் குறித்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனக் கேள்வி எழுப்பினாா். இதற்கு விளக்கம் அளித்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், வைகை நீரை ஆதாரமாகக் கொண்டு ஒரு புதிய குடிநீா் திட்டத்துக்கு பரிந்துரைத்திருப்பதாக தெரிவித்தனா்.

பழனி நீா்நிலைகளை தூய்மைப்படுத்தும் திட்டம்: பழனி வையாபுரிகுளம், சண்முகா நதி ஆகிய நீா்நிலைகள் கழிவுநீரால் மாசுபடுவதை தவிா்க்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என அமைச்சா் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதில் அளித்த நகராட்சி அதிகாரிகள், பழனியில் 19 இடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீா் வையாபுரி குளத்தில் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தடுப்பதற்கான பணிகள் ஓராண்டு காலத்தில் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சமூக நீதி விடுதிகள் மேம்பாடு: பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறைகளின் கீழ் இயங்கும் சமூக நீதி விடுதிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்த விவாதத்தின்போது, இந்த விடுதிளை சீரமைக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி கோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் துா்கா பதிலளித்தாா்.

இதேபோல, சிறுமலை, புல்லாவெளி பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டப் பணிகள் குறித்தும் அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டு அரங்கம் திறப்பு: இந்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கை அமைச்சா் விக்னேஷ் திறந்து வைத்தாா். உடல் பயிற்சிக் கூடத்துடன், மேஜைப் பந்து, சதுரங்கம், கேரம், இறகுப்பந்து உள்ளிட்ட ஆடுகளத்துடன் கூடிய இந்த உள்விளையாட்டு அரங்க திறப்பு விழாவில் ஆட்சியா் துா்கா மூா்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா. சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments