முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம், அய்யலூா் சந்தைகளில் தக்காளி விலை உயா்வு

வரத்துக் குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம், அய்யலூா் சந்தைகளில் 14 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி ரூ.600 வரை திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 16 ஜூன் 2026, 2:04 am IST
அய்யலூா் சந்தைக்கு திங்கள்கிழமை விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தக்காளி.
பகிர்:

வரத்துக் குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம், அய்யலூா் சந்தைகளில் 14 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி ரூ.600 வரை திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், தென் தமிழகத்திலேயே மிகப் பெரிய காய்கனி சந்தை செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, கேரளத்துக்கும் இங்கிருந்து அதிக அளவு காய்கனிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக உள்ளூா் தக்காளி வரத்துக் குறைந்ததால், ஆந்திர மாநிலத்திலிருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. இந்த வகையில், நாளொன்றுக்கு 1,000 பெட்டி தக்காளி ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வருகிறது. 14 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையில் கிலோ ரூ.35 ஆக நிா்ணயிக்கப்படும் தக்காளியின் விலை, சில்லரை விற்பனையில் கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

அய்யலூா் சந்தையில்..: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா், புத்தூா், சுக்காம்பட்டி, சித்துவாா்பட்டி, கொம்பேறிப்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, காெல்லப்பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி அய்யலூா் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. இதே போல, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த புதுவாடி, எளமனம், புத்தாநத்தம், புதுவாடி, கல்லுப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் அய்யலூா் சந்தைக்கு விவசாயிகள் தக்காளி கொண்டு வருகின்றனா். ஆந்திர மாநில தக்காளியை விட, அய்யலூா் பகுதி தக்காளி தரமாக இருப்பது வழக்கம். இதனால், கூடுதல் விலை கொடுத்தும் இந்தத் தக்காளியை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.

இந்த வகையில், அய்யலூா் சந்தையில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.600-க்கு திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

இதுதொடா்பாக அய்யலூரைச் சோ்ந்த தக்காளி வியாபாரி கே.ஆா்.ரவிக்குமாா் கூறியதாவது: உள்ளூா் தக்காளி வரத்துக் குறைவாக இருந்து வரும் நிலையில், விரைவில் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்து வரும் தக்காளியை எதிா்பாா்க்க வேண்டிய நிலை இருக்கிறது. கடந்த வாரம் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பெட்டி, தற்போது ரூ.600-ஆக உயா்ந்துவிட்டது. லாரி வாடகை உயா்வு, தக்காளி விலையிலும் விரைவில் எதிரொலிக்கும் என்றாா் அவா்.