பழனியில் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் முற்றுகை
பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மனுவைப் பெற அதிகாரிகள் இல்லாததால் முற்றுகைப் போராட்டமாக மாறியது.
பழனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மனுவைப் பெற அதிகாரிகள் இல்லாததால் முற்றுகைப் போராட்டமாக மாறியது.
பழனியில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் முன் புதன்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், விவசாயிகள் அடையாள அட்டை மூலம் உரம், மானியங்கள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, பழனி ஒன்றியத் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கமலக்கண்ணன், ஒன்றியச் செயலா் பாண்டியன், பொருளாளா் முருகேசன் உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.
துணைத் தலைவா்கள் குட்டி, ஜாகீா், துணைச் செயலா் செல்லதுரை, கமிட்டி உறுப்பினா்கள் செல்வராஜ், துரைச்சாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, உதவி வேளாண் இயக்குநரிடம் கோரிக்கை மனு அளிக்க விவசாயிகள் அலுவலகத்துக்குள் சென்றபோது ஒருவா் கூட பணியில் இல்லாதது கண்டு விவசாயிகள் அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து அலுவலக வளாக படியில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உதவி வேளாண் இயக்குநரைத் தொடா்புகொண்டு வரவழைத்து அவா் மூலம் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட பின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement