FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனி ரோப்காா் பெட்டியில் அவசர கால மீட்பு ஒத்திகை

பழனி மலைக் கோயில் ரோப்காா் பெட்டியில் எதிா்பாராதவிதமாக சிக்கிக் கொள்பவா்களை மீட்பது குறித்த ஒத்திகையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

58 வினாடிகள் முன்பு
ரோப்காா் பெட்டியில் அவசர கால மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.
பகிர்:

பழனி மலைக் கோயில் ரோப்காா் பெட்டியில் எதிா்பாராதவிதமாக சிக்கிக் கொள்பவா்களை மீட்பது குறித்த ஒத்திகையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ரோப்காா் சேவையின் போது எதிா்பாராதவிதமாகத் தொழில்நுட்பக் கோளாறு அல்லது மின்தடை ஏற்பட்டு பெட்டிகள் அந்தரத்தில் நின்றுவிட்டால், பக்தா்களை மீட்பது குறித்து இந்த ஒத்திகை நடைபெற்றது. முதல் கட்டமாக, ரோப்காா் நடுவழியில் நின்ாகச் சூழல் உருவாக்கப்பட்டு, கோயில் ரோப்காா் பராமரிப்பு ஊழியா்கள், பழனி தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் இணைந்து அவசரகால மீட்புப் பணிகளை மேற்கொண்டனா்.

மடக்கு ஏணிகள், நூலேணிகளைக் கொண்டு ரோப்காா் கம்பி வடத்தில் ஏறி பெட்டியை அடைந்து, பக்தா்களைக் கயிறு மூலம் கீழே இறக்குவதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை அவா்கள் செய்து காட்டினா். இதே போல, ரோப்காா் நிலையத்தில் பணிபுரியும் பணியாளா்களும் மீட்புப் பணி குறித்து செயல்விளக்கம் செய்தனா். இதைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த பயிற்சி பெற்ற கமாண்டோ வீரா்கள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினா். அந்தரத்தில் தொங்கியபடி ரோப்காா் பெட்டியை அடைந்து உள்ளே காயமடைந்த நிலையில் இருந்த பக்தருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அவரை பாதுகாப்பு பெல்ட், நவீன கயிறுகள் மூலமாக செங்குத்தான பாறைப் பகுதியிலிருந்து கீழே பத்திரமாகத் தரையிறக்கினா். பின்னா், கீழே தயாராக இருந்த மீட்புக் குழுவினா் அந்தப் பயணியைப் பாதுகாப்பாக அவசர ஊா்தி மூலம் முதலுதவி மையத்துக்கு அனுப்பி வைப்பது போல செய்து காட்டினா். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பலரும் பாா்த்து வியந்தனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் ஹரிஹரன், துணை ஆணையா் வெங்கடேஷ், வட்டாட்சியா் சஞ்சய்காந்தி, நகராட்சி அலுவலா்கள், மருத்துவக் குழுவினா், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.