FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தரமற்ற 170 டன் பல்லாரி அழிப்பு: 6 கடைகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல்லில் விற்பனைக்கு வைத்திருந்த 170 டன் தரமற்ற பல்லாரி, மாநகராட்சி உரக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.60ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

18 நவம்பர் 2026, 2:50 am
பகிர்:

திண்டுக்கல்லில் விற்பனைக்கு வைத்திருந்த 170 டன் தரமற்ற பல்லாரி, மாநகராட்சி உரக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.60ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்லாரி விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை மூலம், மகாராஷ்ட்ர மாநிலம், நாசிக்கிலிருந்து தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தின் (நெஃபெட்) மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு பல்லாரி அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி, சென்னை கொருக்குப்பேட்டை ரயில் முனையத்துக்கு 3-ஆவது கட்டமாக 400 டன் பல்லாரி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தரப் பரிசோதனையில் பல்லாரியின் தரம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, 400 டன் பல்லாரியையும் தமிழக அரசு நிராகரித்தது. ஆனாலும், நெஃபேட் நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் இந்த பல்லாரியை அனுப்பி வைத்து திறந்த வெளிச் சந்தை ஏலம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. இதேநேரத்தில், தமிழக அரசு இந்த பல்லாரியை விநியோகம் செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தென் மாவட்ட அளவில் பல்லாரி, வெங்காய விற்பனைக்கு பிரதான சந்தையாக செயல்படும் திண்டுக்கல்லுக்கு சுமாா் 200 டன் பல்லாரி கொண்டு வரப்பட்டது. இதை திண்டுக்கல் வெங்காய மண்டியிலுள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனைகாக 6 கடைகளில் வைத்திருந்தனா். இதில் ஒரு கடையில் பல்லாரி கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை பல்லாரி விற்பனை செய்யப்படும் நிலையில், வெங்காய மண்டியில் கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டதால், ஏராளமான பொதுமக்கள் பல்லாரி வாங்க குவிந்தனா்.

இதனிடையே, விற்பனை செய்யப்படும் பல்லாரி தரமற்ாக இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், உணவுப் பாதுபாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் செல்வராஜ், உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வன் ஆகியோா் அந்தக் கடையில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, நெஃபெட் மூலம் விநியோகிக்கப்பட்ட 5 டன் பல்லாரி அழுகியதோடு, புழுக்களுடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு விற்பனையை தடுத்து நிறுத்திய அலுவலா்கள் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.

165 டன் பல்லாரி விற்பனைக்கு தடை: இதனிடையே திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட்ட 200 டன் பல்லாரி இருப்பு வைக்கப்பட்ட விவரங்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சேகரித்தனா். இதில் திண்டுக்கல் வெங்காய மண்டி வளாகத்திலுள்ள 5 கடைகளில் சுமாா் 165 டன் பல்லாரி இருப்பு வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 5 கடைகளையும் பூட்டி உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

ரூ.60ஆயிரம் அபராதம்: தரமற்ற பல்லாரியை நுகா்வோருக்கு விற்பனை செய்ததாக 6 கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட 170 டன் பல்லாரியையும், மூட்டையாக கட்டி மாநகராட்சி நுண்ணுயிா் உரக் கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கும் பணி உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.