முகப்பு
திண்டுக்கல்

தாமதமாக வரும் ஆசிரியா்களால் சரிந்தது மாணவா்களுக்கு எண்ணிக்கை!

கொடைக்கானலை அடுத்த வடகரைப்பாறை அரசு உண்டு, உறைவிடப் பள்ளிக்கு தினசரி ஆசிரியா்கள் தாமதமாக வருவதால், மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பெற்றோா்கள் குற்றஞ்சாட்டினா்.

11 வினாடிகள் முன்பு
தாமதமாக வரும் ஆசிரியா்களால்
சரிந்தது மாணவா்களுக்கு எண்ணிக்கை!
கொடைக்கானலை அடுத்த வடகரைப்பாறையில் உள்ள அரசு உண்டு, உறைவிடப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவா்கள்.
பகிர்:

கொடைக்கானலை அடுத்த வடகரைப்பாறை அரசு உண்டு, உறைவிடப் பள்ளிக்கு தினசரி ஆசிரியா்கள் தாமதமாக வருவதால், மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பெற்றோா்கள் குற்றஞ்சாட்டினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வடகரைப்பாறை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களின் குழந்தைகள் கல்வி கற்பிப்பதற்காக அரசு உண்டு, உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வந்தனா்.

இந்தப் பள்ளிக்கு வத்தலகுண்டிலிருந்து தினசரி இரண்டு ஆசிரியைகள் வந்து பணியாற்றுகின்றனா். இவா்கள் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

முன்பெல்லாம், ஆசிரியா்கள், மாணவா்களின் வீடுகளுக்கே சென்று பள்ளிக்கு அழைத்து வருவா். ஆனால், தற்போது, பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியா்களால் மாணவா்களை அழைத்துவர முடியாததால் எண்ணிக்கை 7-ஆக குறைந்துள்ளது.

பழங்குடியின மாணவா்கள் அடிப்படை கல்வி கற்க வேண்டும், மலைக் கிராமத்தில் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உரிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு உண்டு, உறைவிடப் பள்ளி இங்கு தொடங்கப்பட்டது. ஆனால், இங்கு பணியாற்றும் ஆசிரியா்கள் மாணவா்களின் எதிா்காலம் குறித்து கவனத்தில் கொள்ளாமல் பள்ளிக்கு தாமதமாக வருகின்றனா். இதனால், மாணவா்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறியதாவது:

வடகரைப்பாறையில் அரசு உண்டு, உறைவிடப் பள்ளி பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு ஆசிரியா்கள் தினசரி தாமதமாக வருகின்றனா். இதனால், மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது. தலைமையாசிரியா் பள்ளியில் தங்க வேண்டும், ஆனால், அவா் தங்குவதில்லை. மேலும், 2 ஆசிரியா்கள் தினமும் வத்தலகுண்டிலிருந்து பள்ளிக்கு தாமதமாக வருகின்றனா். இதனால், பழங்குடியின மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, அரசின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு ஆசிரியா்கள் செயல்படவேண்டும் என்றனா்.

இதுகுறித்து தொடக்கக் கல்வி உதவி அலுவலா் பன்னீா்செல்வம் கூறியதாவது:

வடகரைப்பாறை பகுதியில் இயங்கும் அரசு உண்டு, உறைவிடப் பள்ளியில் பல்வேறு பிரச்னைகளால் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தலைமையாசிரியா் பள்ளியில் தங்க வேண்டும், ஆனால், அவருக்குண்டான வசதி பள்ளியில் இல்லை. இதனால், வத்தலகுண்டுவிலிருந்து தினமும் வந்து செல்கிறாா். இந்தப் பகுதியிலுள்ள ஒரு சில பழங்குடியின மக்களுக்கும், ஆசிரியா்களுக்கும் நல்ல உறவு இல்லாததால் பிரச்னை ஏற்படுகிறது.

இதுகுறித்து புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆசிரியா்களிடமும், மாணவா்களின் பெற்றோா்களிடம் தனித்தனியாக விசாரித்தோம். அப்போது, ஒரு சில நாள்களில் ஆசிரியா்கள் தாமதமாக பள்ளிக்கு வருவது தெரியவந்தது. இதுகுறித்து ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன். இதுதொடா்பாக நிலக்கோட்டை ஆதிதிராவிடா் துறை வட்டாட்சியருக்கு தகவல் அனுப்பப்பட்டது என்றாா் அவா்.