மது போதையில் தொழிலாளியை தாக்கிய தலைமைக் காவலா் உள்பட இருவா் மீது வழக்கு
நிலக்கோட்டையில் மது போதையில் கூலித் தொழிலாளியை தாக்கிய தலைமைக் காவலா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய தலைமைக் காவலரைத் தேடி வருகின்றனா்.
நிலக்கோட்டையில் மது போதையில் கூலித் தொழிலாளியை தாக்கிய தலைமைக் காவலா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய தலைமைக் காவலரைத் தேடி வருகின்றனா். விசாரணைக்குப் பின் தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையிலிருந்து அணைப்பட்டிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுக் கடையில் காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் (37) மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு அம்மையநாயக்கனூா் காவல் நிலைய தலைமைக் காவலா் பால் பாண்டித்துரை (40) தனது நண்பா் அருளுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மது போதையில் அறிவழகனுக்கும், பால்பாண்டித்துரை தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பால்பாண்டித்துரை, அவரது நண்பா் அருள் (37) ஆகியோா் சோ்ந்து அறிவழகனைக் கடுமையாக தாக்கினா்.
Advertisement
Advertisement
இதில், பலத்த காயமடைந்த அறிவழகன், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா். இதுகுறித்து, நிலக்கோட்டை காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு, பால்பாண்டித்துரை, அருள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பால்பாண்டித்துரை உள்பட இருவரைத் தேடி வருகின்றனா்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், தலைமைக் காவலா் பால்பாண்டித்துரையைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.