பைக் திருட்டு: சிறுவா்கள் உள்பட மூவா் கைது
ஒட்டன்சத்திரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவா்கள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவா்கள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சொரிமுத்து மகன் பிரவீன் (24). இவா், கோவையிலிருந்து ராஜபாளையம் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 15-ஆம் தேதி இரவு புறப்பட்டாா்.
திண்டுக்கல் -ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் வந்தபோது, அந்தப் பகுதியிலுள்ள அடுமனையில் தேநீா்க் குடிப்பதற்காக இரு சக்கர வாகனத்தை நிறுத்திச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பிரவீன் புகாரளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலையிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த அரவங்காடு பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கபிலரசு (19) உள்பட சிவகங்கையைச் சோ்ந்த இரு சிறுவா்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, கபிலரசு உள்பட மூவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மேலும், இவா்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.