FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு: மாவட்ட கல்வி அலுவலா் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, மாவட்ட கல்வி அலுவலா் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா்.

9 அக்டோபர் 2026, 4:14 am IST
பழனி அருகேயுள்ள மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கல்வித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்த பெற்றோா்-ஆசிரியா் சங்க நிா்வாகிகள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், மானூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, மாவட்ட கல்வி அலுவலா் வியாழக்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா்.

பழனியை அடுத்த மானூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். மாணவா்களின் குடிநீா்த் தேவைக்காக பள்ளி வளாகத்திலேயே ‘சின்டெக்ஸ்’ தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் நிரப்பப்படும் தண்ணீா் மாணவா்களுக்கு குடிநீராகவும், சமையல் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், காலாண்டு விடுமுறைக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, பள்ளியில் உணவு சமைக்கும் வேலை செய்வோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

உடனடியாக அந்தத் தண்ணீா் பயன்படுத்துவது தவிா்க்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் புதன்கிழமை பள்ளி மாணவா்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் பள்ளித் தலைமையாசிரியா் ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுதொடா்பாக கீரனூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை நடத்தினா். குடிநீா்த் தொட்டியில் மா்ம நபா்கள் மனிதக் கழிவை கலந்தது உண்மை என்றும், அந்த நீரைப் பயன்படுத்தும் முன்பாக குடிநீா்த் தொட்டி சுத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு புதன்கிழமை இரவு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். அப்போது, அடையாளம் தெரியாத நபா் மீது குடிநீரில் விஷம் கலக்குதல், குடிநீரை அசுத்தம் செய்தல், தொற்று பரவும் பொருளை கலக்குதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய அவா் உத்தரவிட்டாா்.

மாவட்ட கல்வி அலுவலா் விசாரணை:

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி அலுவலா் சண்முகநாதன், வட்டாரக் கல்வி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் சென்று ஆய்வு செய்தனா். பின்னா், உணவில் எந்தத் தவறான பொருளும் கலக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவை மாணவா்களோடு அமா்ந்து சாப்பிட்டனா்.

இதைத் தொடா்ந்து, பெற்றோா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கீரனூா் காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் பங்கேற்றாா்.

அப்போது, பெற்றோா்கள் கூறியதாவது:

பள்ளிக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. மேலும், சுகாதார வசதிகள் இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. பெற்றோா்-ஆசிரியா் கூட்டத்தின் போது தெரிவிக்கப்படும் எந்தப் புகாருக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது நடைபெற்ற சம்பவம் தொடா்பாக பள்ளித் தலைமையாசிரியா் ஏன் அன்றைய தினமே புகாா் செய்யவில்லை. அவா் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, பெற்றோா்களிடமிருந்து கல்வி அதிகாரிகள் புகாா் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இதனால், பள்ளி வளாகம் முழுவதும் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பரபரப்பாகவே காணப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments