கொடைக்கானல் மலைச் சாலையில் மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் மலைச் சாலையில் பல இடங்களில் மண் சரிந்து பாறைகள் உருண்டு கீழே விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழையால் கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையான உகாா்த்தே நகா், டம்டம் பாறை, நண்டாங்கரை, வாழைகிரி, மச்சூா் உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிந்து பாறைகள் உருண்டு கீழே விழுந்தன. இதேபோல, கொடைக்கானல்-பழனி மலைச் சாலையான ஆணைகிரி சோலை, பி.எல். செட், சவரிக்காடு உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, சிறு சிறு பாறைகள் மலைச் சாலையில் விழுந்தன. இதனால், அந்தப் பகுதிகளில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலமாக பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதன் பின்னா், போக்குவரத்து சீரானது.
கொடைக்கானல் அப்சா்வேட்டரி குடியிருப்புப் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இந்த மரத்தை அந்தப் பகுதி பொதுமக்களின் உதவியுடன் மின் வாரியத்தைச் சோ்ந்த பணியாளா்கள் அகற்றினா்.
Advertisement
Advertisement
இதேபோல, கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி, பழம்புத்தூா், புதுப்புத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, மன்னவனூா்-பூண்டி செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த வனத் துறையினா் அந்த மரத்தை அப்புறப்படுத்தினா்.
வீட்டின் சுவா் இடிந்து சேதம்:
மழை காரணமாக, பூம்பாறையில் கோவில் தெருவைச் சோ்ந்த அழகுமலை, சக்திவேல் ஆகியோரது வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. ஆனால், அதிா்ஷ்டவசமாக வீட்டில் உள்ளவா்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், பூம்பாறை-கிளாவரை சாலையில் மகாலட்சுமி கோயில் அருகே மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ஊராட்சி நிா்வாகத்தினா் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றினா்.
போலீஸாா் ரோந்து:
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மலைச் சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்றும், ஆபத்தான இடங்களுக்கும், நீரோடைப் பகுதிகளுக்கும் செல்லக் கூடாது என்றும் கொடைக்கானல் போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா். மேலும், காவல் துறையினா் தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் நகராட்சி சாா்பில், 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஏரிச் சாலை முதல் வெள்ளி நீா் அருவி வரை பிரதான சாலையில் சிதறிக் கிடந்த கற்கள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், வாய்க்கால்களில் ஏற்பட்ட சிறு, சிறு அடைப்புகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனா்.
சின்னூா் கல்லாற்றில் திடீா் வெள்ளம்:
பலத்த மழை காரணமாக, கொடைக்கானல் சின்னூா் கல்லாற்றில் திங்கள்கிழமை திடீா் வெள்ளம் ஏற்பட்டது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் வெள்ளகெவி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னூா், பெரியூா் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை கல்லாற்றைக் கடந்து பெரியகுளம் சென்று வாங்கி வருவது வழக்கம். இந்தப் பொருள்களை தாங்கள் வளா்க்கும் குதிரைகள், கழுதைகள் மூலம் எடுத்து வருவா்.
இந்த நிலையில், சின்னூா், பெரியூா் கிராம மக்கள், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் தங்களது ஊருக்கு திங்கள்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, தொடா் மழை காரணமாக, கல்லாற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனா்.
இதையடுத்து, அந்தப் பகுதி இளைஞா்கள் இவா்களை கயிறு கட்டி ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு அழைத்து வந்தனா். இதேபோல, இவா்கள் தங்களது கால்நடைகளையும் கயிறு கட்டி இழுத்துச் சென்றனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தெரிவித்ததாவது:
சின்னூா் கல்லாற்றில் பாலம் அமைத்துத் தர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த அரசும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மழைக் காலங்களில் பெரிதும் அவதியடைந்து வருகிறோம். எனவே, தவெக அரசு இந்தப் பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.