அக்னி தீர்த்த வழக்கு: ராமேசுவரம் கோயிலில் மீண்டும் ஆய்வு: தனி அதிகாரியை நியமிக்க உத்தரவு
ராமேசுவரம் கோயில் பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக தனி அதிகாரியை நியமித்து ஆய்வு நடத்துமாறு சுற்றுலாத்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரம் கோயில் பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக தனி அதிகாரியை நியமித்து ஆய்வு நடத்துமாறு சுற்றுலாத்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரம் கோயிலில் அக்னி தீர்த்தம் கடல் பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க உத்தரவிடக்கோரி கோவையைச் சேர்ந்த வழக்குரைஞர் வெண்ணிலா மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ராமேசுவரம் கோயிலில் உள்ள 22 தீர்த்த நீரை விநியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இம்மனுவை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பொறியாளர் குழு ஆய்வு செய்ய ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களின் அறிக்கை அடிப்படையில் வழக்குரைஞர் ஆணையர்கள் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இந்தக்குழு கடந்த 2014 ஜனவரியில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், அக்னி தீர்த்தம் பக்தர்கள் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து வழக்குரைஞர் ஆணையர்கள் சுட்டிக்காட்டிய அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, அறிக்கை தாக்கல் செய்ய ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ராமேசுவரம் கோயில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்சிப்பணிகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராமேசுவரம் பகுதி மேம்பாட்டுக்காக பொறுப்பான அதிகாரி ஒருவரை நியமிக்க சுற்றுலாத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த அதிகாரி, நகராட்சி ஆணையர், வழக்குரைஞர் ஆணையர்கள் சேர்ந்து ராமேஸ்வரம் பகுதியில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ராமேசுவரம் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து செப். 29 இல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.