மயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளை தடயவியல் சோதனைக்கு அனுப்ப நடவடிக்கை
மேலூர் அருகே மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை வருவாய் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலூர் அருகே மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை வருவாய் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டு, புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மயானத்தில் வருவாய் மற்றும் காவல் துறை, மருத்துவத் துறையினர் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை தோண்டி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு குழந்தை உள்பட 4 பேரின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.
நீதிமன்றத்தில் இன்று மனு: மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஆணா, பெண்ணா, இயற்கை மரணமா அல்லது கொலையா, எவ்வளவு காலத்துக்கு முன்பு இறப்பு நிகழ்ந்தது என்பதை தடயவியல் துறையினரால் ஆய்வு செய்து அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கைகளை வருவாய் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் சோதனைக்கான உத்தரவைப் பெறுவதற்காக மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மேலூர் வட்டாட்சியர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்ய உள்ளார். நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு, மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
Advertisement
Advertisement
எஸ்பி ஆலோசனை: நரபலி புகார் தொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் மற்றும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டது தொடர்பான விசாரணைக்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, திங்கள்கிழமை இரவு நேரில் விசாரணை மேற்கொண்டார். கீழவளவு காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கு துணை கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், கீழவளவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அடையாளம் தெரிந்தது: மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் யாருடையது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்கட்ட விசாரணையில் இந்த எலும்புக்கூடுகள் ஒரு குழந்தை, ஒரு முதிய பெண், இரு முதிய ஆண்களுடையது என்பது தெரியவந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் உடல் நலக்குறைவு மற்றும் இயற்கை மரணம் அடைந்தவர்கள் என்றும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.