மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ரயில்வே செயலி குறித்த கருத்தரங்கம்
ரயில்வே யுடிஎஸ் செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ரயில்வே யுடிஎஸ் செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்பதிவில்லா பயணச்சீட்டுக்களைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் யுடிஎஸ் எனும் செயலியை ரயில்வே நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. கூகுள் பிளேஸ்டோரில் இருந்து இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் களில் இயங்கும் செல்லிடப்பேசிகளில் பயன்படுத்த முடியும். ரயில் நிலையத்துக்கு வராமலேயே முன்பதிவில்லா பயணச்சீட்டுகள், சீசன் பயணச்சீட்டுகள், நடைமேடைச் சீட்டு உள்ளிட்டவற்றை எளிதில் பெறும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் வரிசையில் காத்திருந்து பயணச்சீட்டுகளைப் பெற வேண்டிய தேவை இருக்காது.
இதைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோட்ட மேலாளர் நீனு இட்டியரா கலந்துகொண்டு, யுடிஎஸ் செயலின் முக்கியத்துவம், அதைப் பயன்படுத்தும் விதம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவர்களைக் கொண்டு மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன், கோட்ட உதவி வர்த்தக மேலாளர் எம்.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.